April 25, 2024

மெட்ரோ ரெயில் பாதைக்காக சுரங்கம் தோண்டிய பிறகு பாதுகாப்பில்லாத பழைய கட்டிடங்களை புதிதாக கட்டித்தர பரிசீலனை

சென்னை: சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியின்போது சுரங்க வழித்தடத்தின் மேற்பகுதியில் தரை அதிர்வைக் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுரங்க வழித்தடப் போக்கில் உள்ள கட்டிடங்களில் கட்டுமானங்களைக் கண்காணிக்கவும் அதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்டும் எந்திரத்தைப் பயன்படுத்தி சுரங்கம் தோண்டும் அதிர்வு மற்றும் கட்டுமான பாதிப்புகளை கண்டறியும் கருவிகளின் பதிவுகள் செய்யப்படும். சுரங்கம் தோண்டும் போது, மேற்பகுதியில் மாற்றங்கள் ஏற்படா வண்ணம் மேற்பரப்பு கண்காணிக்கும் குழு உறுதி செய்து வருகிறது.

கட்டுமானங்கள் மற்றும் மேற்பூச்சு வெடிப்புகளுக்கான கட்டிட ஆய்வுகள் பதிவு செய்யப்பட்டு குடியிருப்போரின் ஒப்புதல் பெறப்படுகின்றன. சுரங்கம் தோண்டும் எந்திரம் அப்பகுதியைக் கடந்தவுடன் கட்டிடங்களில் வெடிப்புகள் அதிகமானால் முழுமையாக பழுதுபார்க்கப்படும். இதுதவிர, சுரங்கம் தோண்டும் போது அப்பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் தற்காலிகமாவோ அல்லது நிரந்தரமாகவோ மூடப்படும். நிரந்தரமாக மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்துத் தர வழிவகை செய்யப்படும். திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டால் அவற்றிக்குப் பதிலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்துத் தரப்படும். சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்து செல்லும் வரையில் ஆழ்துளை கிணறுகள் இருப்பின் தற்காலிகமாக அடைக்கப்படும். அந்த நேரத்தில் குடியிருப் போருக்குத் தேவையான தண்ணீர் வினியோகம் செய்யப்படும். தங்குவதற்கு பாதுகாப்பில்லை என பட்டியலிடப் பட்ட கட்டிடங்களில் குடியிருப்பவர்களை சுரங்கம் தோண்டும் பணிகளின் பொது இரண்டு மாதங்களுக்கு மாற்று தங்கும் வசதி செய்வது உறுதி செய்யப்படும். மிகவும் பழமையான கட்டிடம், சுரங்கம் தோண்டிய பின்னரும் பாதுகாப்பில்லை என உறுதி செய்யப்பட்டால் புதிய கட்டுமானம் குறித்து பரிசீலனை செய்யப்படும்.

எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் போது சுரங்கம் தோண்டும் எந்திரம் பயன்படுத்தும் போது பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் முதல் பொம்முசந்திரா வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் முதல் பொம்முசந்திரா வரை 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. அதற்கான முழு சாத்தியக் கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. முழு அளவில் அதுகுறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ஓசூரில் இருந்து தமிழக எல்லைப்பகுதி வரை தமிழக அரசும், கர்நாடக எல்லைக்குள் கர்நாடக அரசும் கட்டுமான பணிகள் மற்றும் டெண்டர் பணிகளை மேற்கொள்ளும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி உள்ளது. 5 வருடத்திற்குள் அதற்கான பணிகள் முடிந்து ஓசூரில் இருந்து பெங்களூருக்கு ஒரே டிக்கெட் மூலம் செல்லலாம். அந்த வகையில் ஓசூர்-பெங்களூர் மெட்ரோ வழித் தடம் 2 மாநில ஒருங்கிணைந்த மெட்ரோ திட்டமாக அமைக்கப்பட உள்ளது.