May 15, 2026

தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளத்தில் மே 26ம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 4 நாட்கள் முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது.கேரள மாநிலத்தில் இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (15-05-2026) காலை அதே பகுதிகளில் நிலவுகிறது.

இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தமிழக தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

வங்கக்கடல் பகுதிகளில் 15-05-2026 முதல் 18-05-2026 வரை: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை கேரளம்-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • தொ