October 11, 2024

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. பணம் வழங்கப்படவில்லை அப்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட வெல்லம் மோசமாக இருந்ததாக எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது.

இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரையுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு பொதுமக்களுக்கு பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை தெரிவித்த கருத்து முன் வைக்கப்பட்டது.

ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் இன்னும் சில ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் தகவலும் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.