September 18, 2024

பாரம்பரிய காட்டு பாதையில் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சென்ற பக்தர்கள்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் நேற்று துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 41 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னரே விரதத்தை முடித்து கொள்வார்கள். சபரிமலை சன்னிதானத்திற்கு பம்பையில் இருந்தும், புல்மேடு காட்டு பாதை வழியாகவும் செல்லலாம். பெரும்பாலான பக்தர்கள் பம்பை வழியாகவே செல்வார்கள். புல்மேடு காட்டு பாதையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்ல பக்தர்களுக்கு வனத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பிரச்சினை ஏற்பட்ட பின்பு காட்டு பாதை வழியாக செல்ல வனத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை காட்டு பாதை வழியாக பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தினமும் பகல் 2 மணி வரை பக்தர்கள் இந்த பாதையை பயன்படுத்தி கொள்ளலாம் என வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். வனத்துறை அனுமதி கொடுத்ததை தொடர்ந்து நேற்று சத்திரம், புல்மேடு வழியாக பக்தர்கள் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சன்னிதானம் சென்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் காட்டு பாதை வழியாக 276 பக்தர்கள் சன்னிதானம் சென்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஜோதிஸ் ஒழக்கல் கூறியதாவது:- சபரிமலை செல்லும் காட்டு பாதையை பயன்படுத்த வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காட்டு யானைகளை கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அனைத்து வயது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் மறுத்தார். சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று கூறிய அவர் போலீசாருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை முன்பே அச்சிடப்பட்டது, என்றும் அதில் தவறுகள் இருப்பதால் அந்த குறிப்பேட்டை வாபஸ் பெற இருப்பதாகவும், தெரிவித்தார்.