April 26, 2024

டாக்டர் ராமதாசை எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி! பா.ம.க.வை உடைக்கிறார்!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூன்று பதவிகளுக்கான போட்டியில் ஆளுங்கட்சியை வீழ்த்தி அதிமுக வெற்றிப் பெறவேண்டும் என்பதற்கான புதிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி. அவரது திட்டத்தின் முதல்படி டாக்டர் ராமதாசிடம் இருந்து வன்னியர்களை பிரிப்பது அதன் மூலம் பாமக வை பலகீனப்படுத்துவது. இதனால் வன்னியர்கள் ஒட்டுமொத்த வாக்குகளையும் அதிமுக பெறவேண்டும் என்பது தான். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிமுகவிற்கு வாக்குகள் வீழவில்லை என்பதும் முன்னாள் அமைச்சர்கள் வன்னியர்களாக இருந்தும் அவர்களே தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதாலும் இதற்கு காரணம் டாக்டர் ராமதாஸ் முறையான கூட்டணி தர்மத்தை நிறைவேற்றவில்லை என்கின்ற குற்றச்சாட்டை அதிமுகவினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். இதனால் இனி டாக்டர் ராமதாஸ் அவர்களை நம்பி அதிமுக கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள வன்னிய தலைவர்களை அழைத்து பேசும் போது ராமதாசை நம்பி நம் கட்சி தேர்தலை சந்திக்க கூடாது. அதே நேரம் வன்னியர்கள் வாக்கு வங்கியை இழந்தாலும் அதிமுக வெற்றிப்பெறுவது இயலாத காரியம் எனவே பாமக கட்சியை சேர்ந்த வன்னியர்களை நேரடியாக அதிமுகவில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுங்கள். அதற்கு என்ன தேவையோ? அனைத்தையும் செய்து தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

மேற்கு தமிழகத்தில் உள்ள 50 தொகுதிகளை வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோரை வைத்துக் கொண்டு நான் பார்த்துக் கொள்கிறேன் (எடப்பாடி பழனிசாமி).

வடதமிழகத்தில் உள்ள 100 தொகுதிகளை சி.வி.சண்முகத்தை வைத்துக் கொண்டு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி போன்றவர்கள் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக இருந்து பணியாற்றுவார்கள்.

தெற்கு தமிழகத்தை பொறுத்தவரை ஒ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா, ஓ.எஸ்.மணியம் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள் இப்படி பகுதிவாரியாக பிரித்துக் கொண்டு கட்சிப் பணியாற்றினால் சுலபமாக வெற்றிப்பெறலாம் என்று கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறார் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை இந்த திட்டத்தின்படி ஒருங்கிணைந்து அதிமுகவினர் கட்சிப் பணியாற்றினால் வரும் உள்ளாட்சி நகர்மன்ற தேர்தல்களில் மிகப் பெரிய அளவில் வெற்றிப்பெறலாம் என்றும் இதன் மூலம் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பாமக கட்சி டாக்டர் ராமதாஸ் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்து டாக்டர் அன்புமணியை மாவட்டந்தோறும் அனுப்பி வைத்து பாமக கட்சியில் இருந்து வெளியேறும் வன்னிய பெருமுகர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியில் அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும் வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

– டெல்லிகுருஜி