November 3, 2024

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும். 5 நாட்கள் நடைதிறப்பை முன்னிட்டு பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பூஜைக்கு பிறகு மீண்டும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை அடுத்த மாதம் 6-ந் தேதி திறக்கப்படும். 8-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.