December 3, 2024

சசிகலாவை சந்தித்து பேசியதால் ஓ.பன்னீர்செல்வம் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

சென்னை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. இதுவரை சந்திக்காத தோல்வியை சந்தித்து உள்ளது.

இதன் காரணமாக அ.தி.மு.க. தலைவர்கள் இடையே கடும் சர்ச்சையும், சலசலப்பும் உருவாகி இருக்கிறது.

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமை இருப்பதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டதாக அ.தி.மு.கவில் ஒருசாரார் கூறி வருகிறார்கள். அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைப்படுத்த வேண்டுமானால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இதற்கிடையே சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து ஆலோசனையில ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சசிகலா நேற்று தென்மாவட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று பிற்பகல் அவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

அதே விடுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கியிருந்தார். அவர் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருடன் திடீரென சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். அவர்களிடம் சசிகலா நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

நேற்று மட்டும் இரண்டு தடவை சசிகலாவும், ஓ.ராஜாவும் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் அவரை ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா சந்தித்து பேசியது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓ.ராஜாவும், சில அ.தி.மு.க. நிர்வாகிகளும் திட்டமிட்டு சசிகலாவை சந்தித்து பேசியதால் அதன் பின்னணியில் பல்வேறு வி‌ஷயங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் இன்று காலை முதல் அது பற்றி விவாதித்தனர். அப்போது ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து ஓ.ராஜா உள்பட 4 அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.