September 18, 2024

குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம்- ஜெயலலிதா நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க.வினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள். அப்போது, “குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம்” என்று உறுதிமொழி ஏற்றனர். இதில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, தளவாய்சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், வெங்கடேஷ்பாபு, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலா ளர்கள் இ.சி.சேகர், மலர்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.