March 16, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 வாரமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஜி.கே.வாசன், அண்ணாமலை, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதே போல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமான பேர் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இறுதி கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தொகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க பிரசாரம் நடந்து வருகிறது.