தவெக அரசு ஆட்சி அமைத்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இந்த காலகட்டத்தில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான மின்வெட்டு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஜய்யின் ஆட்சியில் வீர வசனம் பேசுகின்ற மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல்குமார் பொறுப்பேற்ற பிறகு தான் மின் கொள்முதல் கட்டண குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. மின் பற்றாக்குறை இருப்பதைப் போல ஒரு மாயையை, இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. மின் தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கி 37 ரூபாய் 50 காசுக்கு மின் கொள்முதல் செய்ததாக 20 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள்.
கடந்த ஆட்சியில் இருபது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது. வருங்காலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த டெண்டரை ரத்து செய்துள்ளார்கள்.
விஜய் முதலமைச்சர் ஆன பிறகு புழல் சிறைக்கு சென்று பார்வையிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. அவர் ஆய்வு செய்து சென்ற பிறகு இரண்டு பேர் புழல் சிறையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள். அவர் என்ன ஆய்வு மேற்கொண்டார். ஜோசியர் சொன்னபடி அங்கு சென்று வந்தாரா? 17 கைதிகள் தேனி சிறையில் இருந்து சவுகரியமாக எப்படி தப்பித்தார்கள்? தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு குழந்தைகள் அதிகளவில் மாயமாகியுள்ளனர். குறிப்பாக சிறுமிகள். செஞ்சியில் 4 வயது சிறுமி காணாமல் போய் சுமார் ஒரு மாத காலமாகி விட்டது. பல இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கசாப்பு கடைகளில் ஆடுகளை வெட்டுவது போல பட்டப்பகலில் தெருக்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு ஒழிந்து விட்டது இந்த ஆட்சியில்.
போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும். நாகப்பட்டினத்தில் ரூ.400 கோடி மதிப்புள்ள 135 கிலோ தடை செய்யப்பட்ட போதைப்பொருளான மெத்தபெட்டமைன் கண்டறியப்பட்டுள்ளது. இதில் தவெக பிரமுகர் ஈடுபட்டுள்ளார். கடல் வழியாக இலங்கைக்கு இந்த போதைப்பொருள் கடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு எவ்வளவு தயார் செய்து, எத்தனை ஆயிரம் கோடிக்கு அவர் விற்பனை செய்திருப்பார்? இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? முழுமையான செய்தி இதுவரை கிடைக்கவில்லை. முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். இதுவரை செய்தியாளர் சந்திப்பு கூட கிடையாது. எத்தனை நிகழ்வுகள் நடந்தும் தற்போது வரை நிருபர்களை சந்திக்காத ஒரு முதல்வராக இருக்கிறார். விசித்திரமான முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிறார்.
விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. பருப்பு 70 சதவீதமும், எண்ணெய் 50 சதவீதமும் விலையேற்றம் கண்டிருக்கிறது. உணவு தானியங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
‘‘அரசு ஊழியர்களைப் போல முதல்வர் காலை தலைமைச் செயலகம் வந்து மாலை 6 மணிக்கு செல்கிறார். சனி, ஞாயிறு அரசு ஊழியர்களுக்கான விடுமுறை போல இவரும் விடுமுறை எடுக்கிறார். மாலை 6 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. மாலை 6 மணிக்கு வீட்டுக்குள் சென்றால், அடுத்த நாள் காலை 9 மணிக்கு தான் அதிகாரிகளை சந்திப்பதாக எனக்கு தகவல் கிடைக்கிறது’’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
– தொ

More Stories
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு:
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமின் மனு விசாரணை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதியைத் கொண்டாட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!