October 29, 2026

சங்கடங்களை போக்கும் சங்கடஹர சதுர்த்தி

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் “விநாயககோரக்கர்’’ அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனிதோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

* ராமநாதபுரம் உப்பூரில், வெயிலுக்கு விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும், உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறார்.

* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில், விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும், இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்யதிக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது, “மிளகு பிள்ளையார்’’ ஆலயம். மழைக்காக வேண்டி இவரது உடலில், மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால், உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை, ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

* விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர், லிங்கவடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது, அதில் உள்ள விநாயகரைத் தரிசிக்கலாம்.

* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள், பஞ்சமுக ஹேரம்ப கணபதி, நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

* கோயமுத்தூர் மத்தம் பாளையத்தில், காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில், விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக, இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப்பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு, சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப் படுகிறது. இப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

* ஓசூர் – பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

* திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில், வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேதகோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால், செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

  • தொகு