May 26, 2024

மதங்களை கடப்போம்…மனிதம் வளர்ப்போம்நாடு வளம் பெற உழைப்போம்!

நாடு வளம்பெற இணைந்திருப்போம். “எங்கும் அரசியல் எதிலும் அரசியல் இப்படித்தான் இந்தியாவில் அன்றாடம் மாநில கட்சிகள் முதல், தேசிய கட்சிகள் வரையிலும் அன்றாடம் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன. பொதுமக்கள் தேவையை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையை ஒருங்கிணைத்து மக்கள் நலன் சார்ந்து போராடுவதை விட தங்கள் கட்சியின் நலன் சார்ந்தே போராட்ட வியூகங்களை முன்னெடுக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் மனிதநேயம் குறித்து பலர் கருத்துகளின் தொகுப்பை வாசகர்களுக்கு பகிர்ந்துக் கொள்கின்றோம்.இப்பரந்து விரிந்த பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும், மனிதனாக மட்டுமே பிறக்கிறான். குழந்தைகளாய் ஜனிக்கும் போது நிற பேதமோ ஜாதி பேதமோ, மத பேதமோ தெரிவதில்லை.

வளர்ந்த பின் இவையனைதும் வலைகளாக மாறி அவனையோ அவளையோ சிக்க வைத்துவிடுகிறது. அதை அறுத்துக் கொண்டு வெளியில் வர அவர்கள் விரும்புவதில்லை. விரும்பினாலும் இந்தச் சமூகம் அவர்களை விடுவதில்லை.ஜாதி மதங்களைப் பாரோம்.. உயர்ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியிராயினும் ஒன்றே, வேறு குலத்தினாராயினும் ஒன்றே. பாரதி சமூக பொறுப்போடு பதிவு செய்த நெருப்பு வார்த்தைகள். ஜென்மம் என்று ஒன்றை எடுத்துவிட்டால் அவன் ஒன்றுதான். அவனிடம் ஜாதியின் பெயரால் மதங்களின் பெயரால் வேற்றுமை விதையை விதைத்தால் அது விபரீத விளைவுகளையே தரும்.குறிப்பாக… இன்று மத வேறுபாடுகள் தலைவிரித்தாடும் அவல நிலையை காண்கிறோம். மனிதம் மட்டுமே புனிதம் என அவன் உணர மறுக்கிறான். மத துவேஷத்தில் இறங்குகிறான். ஒவ்வொருவருக்கும் அவரவர் மதமே உயர்ந்தது. இந்த எண்ணம் தவறில்லை. மற்றவர் மதம் தாழ்ந்தது எனச் சொல்லும் உரிமை எவருக்குமில்லை.பாவமன்னிப்பு என்ற திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் மிக எளிமையாக ஆனால் மின வலிமையாக தனது வரிகளை பாடலாக பதிவு செய்துள்ளார்.

பறவையைக் கண்டான்…விமானம் படைத்தான்…பாயும் மீன்களில் படகினைக் கண்டான்.எதிரொலி கேட்டான்..பணந்தனைப் படைத்தான்பணத்தின் வீரியத்தையும் அதன் பாதிப்பையும் சொன்ன கவிஞர் இயற்கையை மதம் பிரித்துவிட்டது என்பதை வேதனையோடு மனிதன் மாறிவிட்டான்… மதத்தில் ஏறிவிட்டான் என வடித்துள்ளார். மதவெறி மனித நெறியை மழுங்கடித்து விட்டது. இந்து மதத்தையும் இந்து கலாச்சாரத்தையும் அதன் கலைகளையும் இன்றளவும் ஆதரிக்கின்ற, நேசிக்கின்ற எத்தனையோ கிருத்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இன்றளவும் உள்ளனர். பிரிட்டிஷ் காலத்தில் காவடிச் சிந்து (முருகப் பெருமான் மீது பாடுவது) பாடுவதில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் ஒரு இஸ்லாமியர். அவர் பெயர் காதர் பாட்ஷா.அவரை எல்லோருமே காவடிச் சிந்து காதர் பாட்ஷா என்றே அழைப்பார்கள். பிரபல நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா சாகிப் இசையுலகில் மறக்க முடியாத பெயர்.

அவர் இந்து மதக் கடவுள்ளை மிகவும் நேசிப்பவர் என்பதை விட பூசித்தவர். அவருடைய அறையில் ராமர் பட்டாபிஷேகப் படம் பெரியளவில் இருக்கும். அவர் வாசித்த அத்தனை கீர்த்தனைகளும் இந்து மதக்கடவுள்களை போற்றிய பாடல்களாகவே இருக்கும். இன்றும் அவரது பேரன்கள் காசிம், பாபு இருவரும் அவரது வழியைப் பின்பற்றி அப்பணியை தொடர்கிறார்கள்.

இன்று பிரபலமாக இருக்கும் பாடகர் யேசுதாஸ் அவர்கள், தான் சேர்ந்த மதப்பாடல்களை விட இந்து மதக்கடவுள்களைப் பற்றி பாடியதே அதிகம். இன்னும் பல படிகள் மேலே சென்று ஐயப்பனையும் குருவாயூரப்பனையும் தனது இரு விழிகளாகப் பாவித்து வழிபட்டு வருகிறார். இவரின் ஹரிவராசனம் கேட்ட பின் தானே அந்த சாஸ்தாவே நித்திரை கொள்கிறார். இவர்கள் எல்லாம் மதப்பிரச்சாரம் செய்தோ மதம் மாறியோ இவற்றை செய்யவில்லை. மதம் கடந்து மனிதம் வளர்த்தார்கள். மாற்று மதங்களில் உள்ள நல்லவற்றை கண்டதுடன் மனமாரப் போற்றி மகிழ்ந்தார்கள்.நாம் ஒவ்வொருவரும் மனிதம் புனிதம் என உணர வேண்டும். மதங்களைக் கடந்து மனிதத்தை வளர்க்க வேண்டும். மதங்களின் பெயரால் பிரிவுகள் வராது அனைத்து மதங்களையும் போற்றுவோம். இந்துவாக.. இஸ்லாமியனாக… கிருத்துவனாக இருப்போம். அவரவர் இல்லங்களில் மனிதர்களாக மட்டுமே இருப்போம். அவரவர் உள்ளங்களில்.மனித நேயம் வளர்பபோம்! மனிதர்களாகவே மதம் கடந்து சிந்திப்போம்!!

– ஜெ.பாலசுப்ரமணியன்