April 25, 2024

வாழ்ந்துகாட்டு

வளர்ந்து விட்டவர்களுக்கு வக்காளத்து வாங்கும் இந்த உலகம் வாழ்ந்து வீழ்ந்து வீழ்ந்து விட்டவர்களுக்காகவு-ம் வளர முடியாமல் வீழ்ந்தே கிடக்கும் பலருக்காகவும் என்றாவது குரல் கொடுக்க முன்வருகின்றதா? இல்லையே..! ஏன்? எல்லோருக்கும் ஆசை ஒன்றுதான் எப்படியாவது உயர்ந்து விடவேண்டும்! எப்பொழுதும் நாம் மட்டும் வாழ்ந்து விடவேண்டும் என்பதுதான்.

வீழ்ந்தவனை விட்டு விலகிவிட வேண்டும் என்பதே பல அறிவு ஜீவி ஆலோசகர்களின் கருத்து! வாழ வைப்பதற்கு முயற்சிப்பதை விட வீழ்ந்தவனை தூற்றுவதும் வாழ துடிப்பவனை தாழ்த்திப் பேசுவதும் சிலர் வாடிக்கை. இத்தகைய செயல் புரிவோர் நாட்டில் ஏராளம். அதைவிட கொடுமை வாழ வக்கற்ற சிலர் தங்கள் அன்றாட பசியை போக்கிட வேண்டி அக்கிரமக்காரர்கள் அர்த்தமற்ற பேச்சைக் கேட்டு ஆர்ப்பரித்து ஆவென்று சிரித்து வக்கனையாய் வாய்க்கு வந்தபடி வாழ்த்துவதும் அதன் மூலம் வாயாரா பசியாறுவதும் இன்றைய காலகட்டத்தில் வாடிக்கையாகி போனது!பசியை துறந்து வாழ்வையே மறந்து அற்புதங்கள் செய்வதற்காக அன்றாடம் பணக்காரன் வீட்டு வாசலில் கால் கடுக்க காத்திருப்பான் அறிவாளி! அவனுக்கு இந்த உலகம் தரும் பரிசு உளவாளி என்ற பட்டம்! இதையும் கேட்டு ரசித்து புசிக்கும் ஒரு கூட்டம்!வந்தவன் எதற்காக வந்தான்! ஏன் வந்தான்! என்னச் சொல்ல வந்தான் என்பதை ஒரு மணித்துளி காது கொடுத்து செவிமடிக்க தனவந்தருக்கு நேரம் இருக்காது.

ஆனால் பொழுது போக்கும் போக்கிரிக் கூட்டம் போடும் கூச்சல் கேட்டு உற்சாகம் அடைந்து உதவிக் கேட்காமலேயே கரன்சி நோட்டை கை நிறைய அள்ளித் தந்து ஆனந்தம் அடைவார் அற்ப ராத்திரியில் குடைபிடிப்போர்! பொறுப்பும் புகழ் மாலைம் சூடி மகிழ வேண்டிய தனிமனிதன் தலைகுனிந்து கைகட்டி வாய் முடி மவுனமாய் வேடிக்கைப் பார்ப்பதுடன் சொல்ல வந்த செய்தியை முடி மறைத்து மனபுழுக்கத்துடன் திரும்புவான்!கற்றக் கல்வியும் பெற்ற ஞானமும் அறிவுக் கூர்மையும் ஒருவேளை சோற்றுக்கு மட்டும் பயன்படுகிறதே என்பதை நினைத்து வருத்தப்பட்டு என்ன செய்வது? அதுதான் அடுத்த நாள் உயிர் வாழ்வதற்கு நமக்கு கிடைத்த குறைந்தபட்ச அமுதம் என்று எண்ணிக்கொண்டு பணக்காரன் போடும் பிச்சைக் காசுக்கும் பல்லாக்கு தூக்க வேண்டியுள்ளது.

நான் ஆசைப்பட்டது அந்த பணக்காரன் பார்வை நம் மீது பட்டால் நம் குடும்பம் மூன்று வேளை சோறுக்கு வழியில்லை என்றாலும் ஒருவேளை சோற்றுக்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன், வீட்டு வாசலில் நாய் கால் கடுக்க காத்திருந்தேன் தன் நிறுவனத்தில் ஒரு வேலை தருவார் என்று பிறகு தான் புரிந்தது. பசித்தவனுக்கு வேலைக் கொடுத்தால் அவன் வளர்ந்து விடுவான் என்பதால், ஒருவன் மட்டும் பசியாற வேண்டி நூறு ரூபாய் தந்து அனுப்பி விட்டதின் ரகசியம்..!

குடும்ப பட்டினக்கு வேலை கேட்டுப் போனவன் தான் மட்டும் பசியாற கிடைத்தப் பணத்தை வீதியில் உள்ள பிச்சக்காரன் பசிக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டிற்கு வந்து பணக்காரர் கொடுத்த பணம் வீடு வரும் வழியில் திருடு போய்விட்டது என்று கூறி சமாளித்து எல்லோரும் பட்டினியாய் இருப்போம் என்பதற்காக பொய் கூறினான்.

இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் பசியை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்தது! நகரத்தின் ஒரு மூலையில் பல வரலாறும் இப்படித்தான் பல கோணங்களில் ஏழ்மையையும், வறுமையையும் கதைகளில் பாடமாகவும், கல்வியில் பாடமாகவும் வைக்கப்படுகின்றது. படித்தவர்கள், அதிகம் படித்தவர்கள் குறைவாக படித்தவர்கள் மெத்தப்படித்தவர்கள் இப்படி பலவிதமான பிரிவை ஏற்படுத்திக் கொண்டு, தங்களுக்குள் ஒரு வரையரையை நிர்ணயம் செய்துக் கொண்டு அடுத்தவனுக்கு வாய்ப்பு தருவதற்கு மணம் இல்லாமல், தனியார், பணக்காரர்கள், தொழிற்சாலை கல்விக்கூடம், மருத்துவமனை வாகன போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்பினை தாம் குறைந்தவர்கள் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டு விடுகிறார்கள். இதன், விளைவு தரமான கடின உழைப்பாளி முதல் போதுமான கல்வி தகுதி பெற்றவர்கள் கூட, வேலை தேடி அலைந்து திரிந்து, வருவாய் இன்றி குடும்ப வாழ்க்கையை பசி, பட்டினியாகவே அன்றாடம் போக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்.

இதன் தாக்கம் ஆண், பெண் இருபாலருக்கும் உரிய பருவத்தில் திருமணம் நடப்பதில்லை! வேலை கிடைப்பதில்லை. அதனால் திருமணம் தடைப்படுகிறது. குடும்பமும் தள்ளாடுகிறது. ஏழ்மை, அடுப்பில் பூனை தூங்கும் அப்பா, அம்மா விருப்பம் நிறைவேற வேண்டி ஐந்து பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள குடும்பம், வீடு இழந்து காடு இழந்து, நாடு கடந்து செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு நகரத்து நெரிசலில் வாடகை வீட்டில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

காதல் என்ற போர்வையில் ஏழ்மை விலை பேசப்படுகிறது சாதி மறுப்பு, சாதி கலப்பு திருமணம் அதிகரிக்கவும் செய்கிறது. இதன் பொறுட்டு சாதி மோதல்கள் கொலையாய் மாறி சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டு குடும்பமே தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படுகின்றது. அரசும், காவல்துறையும் விசாரணை கமிஷன் போட்டு, ஏழ்மையையும், வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், தீர்ப்பதற்கும் போக்குவதற்கும் பதிலாக, தவறுகளை குழிதோண்டி புதைத்து விடுகிறது.

பதவி என்ற சுகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என் கதையை கேட்டு இனியாவது தனி மனிதர்கள் பணக்காரர் வீட்டு வாசலில் காத்துக் கிடந்து, அறிவற்ற மனிதர்கள் அலட்சியத்திற்கும் சூட்சிக்கும் ஆட்படாமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழியைத் தேடுங்கள் கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொண்டு இருக்கும் வேலைக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள்! விரும்பும் வேலை கிடைக்கும் வரை கொடுக்கும் வேலையைச் விரும்பிச் செய்யக் கற்றுகொள்ளுங்கள்.

பசிக்கு உணவு தேடுங்கள் ருசிக்கு உணவு தேட வேண்டாம். காதல் அழிவதில்லை! விரும்பாத காதலர்கள் வாழ்வதில்லை! இதனை மனதில் தூக்கி நிறுத்துங்கள் இளைஞர்களே! அதிகாரத்திற்காக போராடுங்கள் ஆக்கிரமிப்பு (நிலம்) அபகரிப்புக்கு (பெண்) போராட வேண்டாம்!

– சாமி