April 26, 2024

வணிகர் சங்க பேரமைப்பு மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் மே 5ந் தேதி கடைகளுக்கு விடுமுறை- விக்கிரமராஜா அறிவிப்பு

மாநாட்டு ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னின்று செய்து வருகிறார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.

சமயபுரம் அருகே இதற்காக 52 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

மாநாட்டு ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னின்று செய்து வருகிறார்.

தமிழக வணிகர்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5ந் தேதி நடத்திட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வருகின்ற மே 5ம் நாளன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சி தரணியில் திரள இருக்கிறார்கள். மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று, வணிகர் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்களின் வரலாற்றில் புதியதோர் மைல் கல்லையும் படைத்திட இருக்கிறார்கள்.

நடைபெற இருக்கும் 39வது மாநில மாநாடு வணிகர்களின் வரலாற்று அத்தியாயத்தில் முத்திரைப்பதித்து, ஒரு அடையாள மாநாடாக, வணிக வரலாற்றின் ஒரு திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என்கிற உறுதியோடு, குடும்ப விழாவாக கருதி, வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்க இருக்கும் அனைவருக்கும் மாநாட்டு அரங்கிலேயே காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர் என அனைத்தும் வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மே5 வணிகர்தின மாநாட்டிற்கு குறுகிய கால அவகாசமே இருக்கின்ற நிலையில், நிர்வாகிகள் அனைவரும் துரிதமாக செயல்பட்டு, மாநாட்டை வெற்றி மாநாடாக சிறப்பித்திட தங்களின் அன்பான ஒத்துழைப்பை அளித்திட வேண்டும் மாநாட்டிற்கு வருகை தர இருக்கும் வணிகர்கள் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.