April 26, 2024

புதுச்சேரி மாநில வருவாய்க்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி புதிய ஆளுநர் நியமனம் வருமா?

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி தனது அதிகாரத்தை முழுவதும் பயன்படுத்தி முழுநேரமாக அரசு அதிகாரிகளையும், அரசு ஊழியர்களையும் கண்காணித்து வருவதாக கூறிக்கொண்டு ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த முயற்சி சட்ட ரீதியாகவும் யூனியன் பிரதேச விதிகளுக்கு உட்பட்டதாகவும் அமைந்தாலும் ஒரு மாநிலத்தின் வருவாயை ஆளுநர் தலையிட்டு மக்கள் திட்டங்கள் நிறைவேறாமல் தடுத்துவருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி ஆளாகியுள்ளார். தனக்கு ஒத்துப்போகும் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தனது விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் உயரதிகாரிகளை பணியில் அமர்த்துகிறார்.

அதிகாரிகளும் தாங்களுக்கு எந்த வகையிலும் மாத ஊதியம் கிடைப்பதை மத்திய அரசு நேரடியாக வழங்குவதால் புதுச்சேரி மாநில மக்களை பற்றியோ அவர்கள் கோரிக்கை குறித்தோ எந்தவிதமான சலுகைகளையும் காட்டுவதற்கு தயாராக இல்லை. குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் சில பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள கடைநிலை ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க முடியாமல் முழுக்க உள்ளூர் வருவாயை மட்டும் நம்பி ஆட்சி நிர்வாகத்தை நடத்தி செல்ல முடியாமல் தொடர்ந்து நிதி பற்றாக்குறை என்ற அளவிலேயே நிர்வாகத்தை நடத்தி செல்லும் முதல்வர் நாராயணசாமி மற்றும் உள்ள அமைச்சர்கள் தங்கள் இலாக்காக்களில் எந்தவித முடிவையும் தன்னிச்சையாக நேரடியாக முடிவெடுக்க முடியாமல் அரசு நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி துணைநிலை ஆளுநர் ஒவ்வொரு இலாக்காக்களிலும் மக்கள் நலன்களில் நடைபெறும் திட்டங்களில் முட்டுக்கட்டைப் போட்டு சட்டத்தை காரணம் காட்டி தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறார் துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி.

துணைநிலை ஆளுநராக கிரேண்பேடி பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அலட்சியமாகவே பார்த்து வருகிறார். முதல்வர் நாராயணசாமி அவர்களோடு தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். குறிப்பாக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியை மதிக்காமல் தன்னிச்சையாக பாஜக கட்சியை சேர்ந்த மூன்று நபர்களை சட்டமன்ற உறுப்பினராக நியமித்து பதவி பிரமாணத்தையும், ஆளுநர் மாளிகையில் அவரே செய்து வைத்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்ட பொழுது அதை அங்கீகரித்து உடனடியாக கையெழுத்து இடமால் கோப்புகளை கிடப்பில் போட்டுவிட்டு காலதாமதம் செய்துள்ளார். நியமன எம்.எல்.ஏக்கள் நீதிமன்றம் வரை சென்று தங்களுக்கு வாக்குரிமை உள்பட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு மாநில அரசு பணிய வைத்து ஆளுநரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அவரது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார். காலையில் தொடங்கி  ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் புடைசூழ மக்கள் குறைகேட்பு என்ற ஒரு திட்டத்தை அறிவித்து புதுச்சேரி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதே நேரம் சட்டமன்றம் உறுப்பினர்கள் கோரிக்கைகளையோ, அமைச்சர்களின் கோப்புகளையோ அலட்சியமாக புறக்கணித்து திருப்பி அனுப்புகிறார் என்று முதல்வர் நாராயணசாமி பலமுறை செய்தியாளர்களிடம் ஊடகம் மூலம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இருந்தாலும் இதுவரை துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி அவர் விரும்புவதையும் அவர் என்ன செய்ய நினைக்கின்றாரோ அதை மட்டும் நடைமுறை படுத்துவதில் உறுதியாக நிற்கிறார். இதனால் புதுச்சேரி மாநில நிர்வாகம் மாநில மக்களின் நலனில் அக்கறையின்றி செயல்படுவதாக பொதுமக்கள் அதிருப்திக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலை இன்னும் 6 மாத காலங்களுக்கு தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி வீசி எரிவார்கள் என்று துணைநிலை ஆளுநர் எதிர்பார்க்கிறார். ஆனால் நடைபெற போவது நேர்மாறாக அமையும் என்பதை துணைநிலை ஆளுநர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நிமிடத்தில் துணைநிலை ஆளுநர் கிரேண்பேடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள களநிலவரம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மாநிலத்தின் வருவயை உயர்த்துவதற்கு தான் நிர்வாக தலைமை பீடத்தில் இருப்பவர்கள் தான் முயற்சி செய்யவேண்டுமே தவிர நிரந்தர வருவாயை ஊழலை காரணம் காட்டி தடுத்து நிறுத்துவது என்பது எவ்வகையிலும் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியாது., மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீதும் காங்கிரஸ் அமைச்சரவை மீதும் மத்திய அரசுக்கும் அவரால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் வெறுப்பும் அதிருப்தியும் இருக்கலாம். ஆனால் மாநிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளும் அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் முட்டுக்கட்டை போடுவது என்பது ஒரு மோசமான நிர்வாகத்தின் வெளிப்பாடு என்பதை உணர முடிகிறது.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை வருவாய் ஈட்டக்கூடிய இரண்டு தொழில்கள் ஒன்று மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய். இன்னொன்று சுற்றுலா பயணிகள் வருகையால் கிடைக்கின்ற வருவாய், மூன்றாவது வணிக வரி மூலம் கிடைக்கின்ற வருவாய் இதைதவிர வேறுவிதமான வருவாய் அந்த மாநிலத்திற்கு கிடைப்பதற்கு வேறு வழியில்லை. தற்பொழுது மதுபான விற்பனையில் தனியார் வசமும் அரசின் வசமும், இருந்து வருகின்றது. அரசின் மூலம் விற்பனை செய்யக்கூடிய மதுபான கடைகளில் வருவாயை விட ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் அது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. வருவாய் ஈட்டுவதையே குறிக்கோளாக தனியார் மதுபான கடைகளில் போலியான மதுபானம் நிரப்பப்பட்டு அரசுக்கு பெரும் அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து தவறுகளுக்கு தண்டம் (அபராதம்) விதித்து அரசின் வருவாயை பெருக்கி மதுபான விற்பனையை அதிகரிக்க செய்யாமல் தவறு செய்த கடைகளை மூடு விழா நடத்தி மொத்த வருவாய்க்கும் முட்டுகட்டை போடுவது என்பது எந்தவகையில் நியாயம் என்று தொழில் முனைவோர்கள் புலம்புகிறார்கள்.

தற்பொழுது புதுச்சேரியில் புதிதாக ஒரு நிலை உருவாகி விட்டது. துணைநிலை ஆளுநர் கிரேண்பேடி அவர்கள் வருகையால், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு ஒருவிதமான அலட்சியப்போக்கு நிலவுகிறது. இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற்று ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாநில மக்களை வாழவைப்பதற்கு பதிலாக புதுச்சேரியின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிக்கு தள்ளப்படுவதையும் வாங்கும் திறன் அற்று தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்டு எங்கு சென்று முறையிட்டாலும் தீர்வு கிடைக்காத நிலையில் பொதுமக்கள் அன்றாடம் திண்டாடுகிறார்கள். போதா குறைக்கு கொடிய நோய் கொரனா தாக்கம் ஒருபுறம் மக்களுக்கு உயிர்பயத்தை போக்கி கொண்டு இருக்கும் பொழுது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சிறு, குறு வணிகர்களும், வியாபாரிகளும் வருவாய் இழந்து தொழில் முடங்கி இருப்பதை பார்த்து ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

மத்திய அரசாங்கமோ கடன் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள் ஆனால் வட்டியை குறைப்பதை ஏற்கமாட்டோம். வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் கட்டாயம் என்பது கிடுக்கிபுடி போடுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் ஓரளவிற்கு பொதுமக்களின் கஷ்டத்திற்கு  ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தாலும் அவர்களாலும் பெரிய அளவிற்கு பொதுமக்களுக்கு நேரடியாக செய்ய இயலவில்லை. இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு காணவேண்டும் என்றால், மாற்றம் வரவேண்டும் என்றால் தேர்தல் ஒன்று தான் இதற்கு தீர்வு என்று எதிர்கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆளுநர் கிரேண்பேடி அவர்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விரட்டி அடிக்கின்ற பணியை விரைவாக செய்யவேண்டும் என்ற விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதர்கட்சிகளும் ஒரே நிலைப்பாடில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இந்தியா, ப்ரெஞ்ச் கலாச்சாரம் இணைந்து செயல்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். கிரேண்பேடி கலாச்சாரம் புகுத்தப்பட்டதால் புதுவை மாநிலம் தனது புகழை இகழ்ந்து பொலிவை இழந்து வருவாயை இழந்து மக்கள் அன்றாடம் பிரச்சனைக்கு அள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எங்களை இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஆளுநர் கிரேண்பேடி அவர்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற்று புதிய ஆளுநரை புதுச்சேரிக்கு நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் முழுவதும் அக்னிமலர்கள் நடத்திய கருத்து கணிப்பில் திரட்டப்பட்ட தகவல்களை வாசகர்களுக்கு தொகுத்து தருகின்றோம்.

– டெல்லிகுருஜி