April 26, 2024

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்- கவர்னர் உத்தரவு

சென்னை: வரலாற்றில் நினைவுக்கூரப்படாத தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும்படி பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கவர்னர் ரவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நாடு விடுதலை அடைந்த தன் மிகப்பெரும் கொண்டாட்டத்தை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். நம் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. நமது சுதந்திர போராட்டத்தின் பெருமைமிகு வரலாறு கலாசாரம் மற்றும் இந்தியாவின் சாதனையை சொல்கிறது. நீண்ட சுதந்திர போராட்ட களத்தில் முன்னணி வீரர்கள் தவிர பல வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய வரலாறு அறியப்படாமலேயே போனது. அவர்களை கவுரவப்படுத்தவும் அவர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் கடமையும் நம் முன் உள்ளது. நமது தமிழ்நாட்டில் எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் அந்நியரை இம்மண்ணை விட்டு விரட்ட செயற்கரிய தியாகங்களை செய்துள்ளனர். இதில் பலரது தியாகங்கள், பங்களிப்புகள் பொது வெளியில் அறியப்படாமலேயே மறக்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேசம் அதற்காக உழைத்த தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராட்டங்களை எதிர்கால தலைமுறை அறிய அவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவது நம் கடமை. இது சம்பந்தமாக, உங்கள் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த குறைந்தபட்சம் 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நீங்கள் நியமிக்க வேண்டும்.

பொருத்தமான ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் கண்டு, அவர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த ஆராய்ச்சித் திட்டத்துக்கான பெல் லோஷிப் வழங்கப்படும். இத்திட்டத்தை முடிக்க ஒரு வருட கால அவகாசம் வழங்கப்படலாம். அதன் முடிவில் ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பிக்கப்படுவார்கள். இது வரலாற்றில் மறைக்கப்பட்ட அந்த வீரர்களுக்கு நாம் அளிக்கும் புகழஞ்சலியாகவும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெருமையாகவும் இருக்கும். இந்த ஆராய்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிலை குறித்து அவ்வப்போது தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.