May 5, 2024

தலைவர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, பின்னர் அது மோதலாக உருவெடுத்து, இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சிகளைப் பிளந்த சம்பவங்கள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தின் தான் அதிகம் என்பது, மாநில அரசியலைக் கூர்ந்து கவனித்தவர்களுக்கு தெரியும்.

தி.மு.க, அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளை விட்டுத்தள்ளுங்கள். அடுத்தவர் தோளில் ஏறி சவாரி செய்தால் மட்டுமே, தேர்தல் களத்தில் கரை ஏற முடியும் என்ற நிலையில் உள்ள சின்ன கட்சிகளும், இரண்டாம் கட்டத் தலைவர்களால் உடைந்த வரலாறுகள் வியப்பூட்டும் உண்மை.

பா.ம.க., மூப்பனாரின் த.மா.கா. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.

வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவாக்கி, அதனை அரசியல் இயக்கமாக வளர்த்தெடுத்தார்.

ஆரம்ப காலத்தில் அதில் பங்களிப்பு செய்த பல தலைவர்கள், நிர்வாகிகள் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணங்களுக்காக விலகினர்.

பண்ருட்டி ராமச்சந்திரன், தீரன் போன்றோர் இந்தப் பட்டியலில் அடங்குவர். தனித்து அவர்களால் சோபிக்க முடியவில்லை.

ஆனால், பா.ம.க.வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரின் அன்புக்கு பாத்திரமாக விளங்கி, 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து வெளியேறி, தனிக்கட்சி ஆரம்பித்து தனி அடையாளத்தோடு இருப்பவர் வேல்முருகன்.

இவரது ஆரம்ப நாட்கள், பா.ம.க.வில் இணைந்த சூழல், அந்தக் கட்சியில் இருந்து விலகியது, தனிக்கட்சி தொடங்கியது முதலான நிகழ்வுகளை விரிவாக காண்போம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள புலியூர் காட்டுஜாகை என்ற கிராமத்தில் பிறந்தவர் வேல்முருகன். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஊரும் இதுவே.

செல்வ செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது அளவற்ற அன்பு கொண்டவர்.

அந்த அன்பே, பிரபாகரனை தூக்கிப்பிடித்த பா.ம.க.வில் அவர் சேருவதற்கான ஒரே காரணம்.

இயல்பாகவே போராட்ட குணம் கொண்ட வேல்முருகன், பா.ம.க.வில் வேகமாக முன்னேறினார். கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பதவி வரை உயர்ந்தார்.

பா.ஜ.க.வின் தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். இருப்பது போல், பா.ம.க.வின் தாய் அமைப்பாக இருப்பது வன்னிய சங்கம். இதில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் காடுவெட்டி குருவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

ராமதாஸ், தன் உறவினரான குரு பக்கம் நின்றார். ஆனால், வன்னிய  இளைஞர்கள் மத்தியில் வேல்முருகனுக்கு அபரிமிதமான ஆதரவு நிலவியது.

நாளாவட்டத்தில் அன்புமணிக்கு போட்டியாக வேல்முருகன், கட்சிக்குள் உருவெடுத்து விடுவாரோ என்று நினைத்தார் ராமதாஸ்.

இதனால் கட்சியில் இருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார்.

இதனை ஜீரணித்துக் கொள்ள இயலாத வேல்முருகன், கட்சி நடவடிக்கைகளில் கொஞ்ச காலம் தீவிரம் காட்டாமல் இருந்தார். அவரை 2011 ஆம் ஆண்டு பாமகவில் இருந்து நீக்கினார் ராமதாஸ்.

அங்கிருந்து வெளியேறிய வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சியை 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளில் ஆரம்பித்தார்.

இப்போது 51 வயதாகும் வேல்முருகன் தன் பொது வாழ்க்கையில் 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டவர். டோல்கேட்டுகளில் அநியாயமாக சுங்கம் வசூலிப்பதை எதிர்த்து இன்றும் போராடி வருபவர்.

மூன்று முறை எம்.எல்.ஏ.:

பா.ம.க.வில் இருந்தபோது பண்ருட்டி தொகுதியில் இருந்து 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு நெய்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார்.

தனிக்கட்சி தொடங்கிய நிலையில் கடந்த தேர்தலில் (2021) தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றார். பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தனிக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரைக்கும் உயர்ந்த விஜயகாந்த் இன்று எம்.எல்.ஏ.வாகவில்லை சரத்குமாரும் எம்.எல்.ஏ.வாகவில்லை.

தனிக்கடை விரித்த மேலும் பல தலைவர்கள் நிலையும் (கமல்ஹாசன், எர்ணாவூர் நாராயணன், என்.ஆர்.தனபாலன் போன்றோர்) இதுதான்.

கடந்த தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய பெரிய கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் தோற்றுப்போனார்கள்.

ஆனால் ’ஒன் மேன் ஆர்மி’யாக இருக்கும் வேல்முருகன், தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ.வாக இருப்பதே சாதனை தான்.

– பி.எம்.எம்.