March 28, 2024

ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பயணம்

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் ஜோ பைடன்-மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார். இதற்கு முன்பு பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்று உள்ளார். அது உத்தியோகப்பூர்வ பயணமாக இருந்தது. பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் தேதி, ஜோ பைடனுடன் சந்திப்புக்கான தேதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக அரசு முறை பயணமாக மோடி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். ஜோ பைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மட்டுமே அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ம் ஆண்டு ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விருந்து அளிக்கப்பட்டது.