May 5, 2024

சென்னையில் 3 பணிமனைகள் தனியார் மயமாகிறது

சென்னை: சென்னையில் 500 தனியார் பஸ்களை இயக்க அரசு எடுத்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தனியார் பஸ்கள் இயக்குவது உடனடியாக அமலுக்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் பணிமனைகள் பராமரிப்பை தனியார் மயமாக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. சென்னையில் வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய 3 பணிமனைகளையும் முதல் கட்டமாக தனியாரிடம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளன. பணிமனை பராமரிப்பு மற்றும் பஸ்கள் பராமரிப்பை 30 ஆண்டுகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ரூ.1540 கோடி ரூபாயில் டெண்டர் விடப்படுகிறது.

இதே போல் விரைவில் மற்ற பணிமனைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. எனவே தனியார் மூலம் பராமரிக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் தான் பராமரிப்பு குறைபாடு ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாவதற்கு அறிகுறி என்றார் எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியபிள்ளை. மேலும் அவர் கூறியதாவது:- போக்குவரத்தை படிப்படியாக தனியார் மயமாக்க இப்படி ஒவ்வொன்றாக தனியார் மயமாக்குவதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொழிற்சங்கங்கள் இதை அனுமதிக்காது என்றார்.