April 26, 2024

கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் அவலம் முடிவுக்கு வருவதுஎப்போது?

நிலா நிலா ஓடி வா என்று குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு தாய்மார்கள் பாட்டு பாடிய காலம் மாறி, அந்த நிலாவுக்கே மனிதர்கள் செல்கிற அளவுக்கு வி…ஞானமும், தொழில்நுட்பமும் முன்னேறி விட்டது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும் ஒரு நாட்டையே அணு ஆயுத தாக்குதல் மூலம் அழித்துவிடலாம். உலகின் எந்த மூலைக்கும் இருக்கிற இடத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் வழியாக தொடர்பு கொண்டு விடலாம். உலகின் எந்த ஒரு விஷயத்தையும் செல்போனில் இணையதளம் வாயிலாக கண்டறிந்து விடலாம். மொத்தத்தில் உள்ளங்கைக்குள் உலகம் வந்து விட்டது.

ஆனாலும் இன்னும் கொடுமை, கழிவு- நீர் தொட்டியை மனிதர்கள் சுத்தம் செய்கிற அவலம் நீடிப்பது தான். தமிழ்நாட்டில் தான் இந்த அவலம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. சென்னை போன்ற நகரங்களில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்கிற தொழிலாளர்கள் விஷவாயு கசிவுக்கு ஆளாகி பலியாகிற பரிதாபம், தொடர்கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. இதுபற்றி சமீபத்தில் பாராளுமன்றத்தில் வெளியான சில தகவல்கள் நெஞ்சை நெருடுபவையாக அமைந்துள்ளன.

அவை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்கிற வேலையில் இறங்கி கடந்த 2019-ம் ஆண்டில் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 110. கடந்த 5 ஆண்டுகளில் இது உச்சம்.

2015-ம் ஆண்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 57. 2016-ல் இந்த எண்ணிக்கை 48. 2017-ல் 93. 2018-ல் இது 68 ஆக இருந்தது. ஆக தொடர்ந்து இந்த எண்ணிக்கை பெரும்பாலும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உத்தரபிரதேச மாநிலத்துக்கு என்றாலும் தமிழ்நாட்டுக்கு 4-வது இடம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 பேர் இறந்திருக்கிறார்கள்.