April 26, 2024

இதயம் சுமந்து பயணித்து உயிா் காத்த ஹெலிகாப்டர்

[responsivevoice_button voice=”Tamil Male”] தரை வழி, வான் வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்தில், ‘உயிருள்ள’ இதயத்தை திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்று, வேறு உடம்பில் பொருத்திய சம்பவம், புல்லரிக்க செய்கிறது. என்ன விவரம்? விரிவாக அலசலாம்.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் பக்கமுள்ள செம்பழந்தி என்ற ஊரை சேர்ந்தவர் லாலி கோபகுமார்.

50 வயதான பள்ளி ஆசிரியை. பவுந்தகடவு அரசு ஆரம்ப பள்ளியில் வேலை பார்த்து வந்தார். லாலி, திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் உடல்நல கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை லாலி, மூளைச்சாவு அடைந்தார். லாலியில் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர், அவரது வாரிசுகள். கேரள மாநில அரசு ‘’உடல் உறுப்பு நன்கொடை திட்டம்’ ( மிருத சஞ்சீவானி) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், ‘மிருத சஞ்சீவானி’’யில் பதிவு செய்தால், ’இருப்பு’’ வரும் நேரத்தில் பதிவு செய்த நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படும்.

சஞ்சீவானியை, லாலியின் உறவினர்கள் தொடர்பு கொண்டபோது, கொச்சியில் உள்ள லிஸ்ஸி என்ற மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெறும் லினா சிபு என்ற 49 வயது பெண்ணுக்கு இதயம் தேவைப்படுவது தெரிய வந்தது. கொத்தமங்கலம் என்ற ஊரை சேர்ந்த லினா, கடந்த 3 மாதங்களாக ‘மாற்று இதய’’த்துக்காக, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காத்திருந்தார். மூளைச்சாவு அடைந்த லாலியின் இதயத்தை லினாவுக்கு பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதயத்தை, அதன் துடிப்பு அடங்குவதற்குள், திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி அனுப்புவது எப்படி? .ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அரசின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் இதயம் செல்வது சாத்தியமல்ல. லிஸ்ஸி மருத்துவமனை இயக்குநரான டாக்டர் பால் என்பவர், முன்னாள் எம்.பி.ராஜீவுக்கு செய்தியை சொன்னார்.

அந்த எம்.பி. கேரள முதல் -அமைச்சர் பினராயி விஜயன் கவனத்துக்கு, இந்த விஷயத்தை கொண்டு சென்றார். கேரள அரசு கடந்த மாதம் காவல்துறையினர் பயன்படுத்திக்கொள்ள வாடகைக்கு ஹெலிகாப்டர் ஒன்றை தருவித்து இருந்தது. அந்த ஹெலிகாப்டரை இதயத்தை கொண்டு செல்வதற்கு அனுமதி அளித்தார், பினராயி. பின்னர், இதய மாற்று ஆபரேஷன் ஏற்பாடுகள் வேகம் எடுத்தன. கொச்சியின் லிஸ்ஸி மருத்துவமனையில் இருந்து டாக்டர் ஜோஸ் சாக்கோ தலைமையிலான குழு நேற்று பிற்பகல், திருவனந்தபுரம் வந்தது.

இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்து, லாலியின், இதயம் தனியே எடுக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சரியாக 3.05 மணிக்கு புறப்பட்ட ‘’ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்’’ 3.55 மணிக்கு கொச்சியில் உள்ள கிராண்ட் ஹியாத் ஓட்டல் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது. அங்கிருந்து 5 நிமிடத்தில் மருத்துவமனைக்கு போய் சேர்ந்தது, இதயம். இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. எனினும். அடுத்த 48 மணி நேரம் கழித்தே ‘ ஃபைனல் ரிசல்ட்’ கிடைக்கும். இதயம் சுமந்து சென்ற இந்த ஹெலிகாப்டருக்கும் ஒரு கதை உள்ளது. அதையும் தெரிந்து கொள்ளலாம். பவான் ஹான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து மாதம் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் வாடகைக்கு இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது.

11 பேர் அமரலாம். கொரோனாவால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இவ்வளவு ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டரை வாங்க வேண்டுமா?’’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஹெலிகாப்டரை சொந்தமாக வாங்க வில்லை. வாடகைக்கு தான் எடுத்துள்ளோம். இது மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும்’’ என்று முதல்வர் பினாராயி அளித்த விளக்கத்தை இன்னும் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர், முதன் முதலாய், ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டு, பொதுச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.