April 26, 2024

அதிமுக அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜேந்திர பாலாஜி தலைமறைவு!!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஏழு மாதங்களை கடந்து விட்ட நிலையில் 5 முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து சுவது முறையாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி நெருக்கமானவர்களின் வீடுகளிலும் மற்றும் தங்கமணி வீடுகளிலும் சுவது முறையாக சோதனை நடைபெற்றது. ஆனால் ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை. இருந்தாலும் ஒவ்வொருவர் மீதும் ஆதாரங்களுடன் முதல் அறிக்கை பதியப்பட்டு (திமிஸி) வழக்கு தொடுத்து விரைவில் அவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரிப்கோ கரன்சி இந்தியாவில் அனுமதிக்கப்படாத நிலையில் அதில் ஏராளமான ரூபாயை முதலீடு செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை நடத்திய பொழுது தெரியவந்துள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணி ரிப்கோ கரன்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பில்லை என்று கூறுகிறார். இந்த நிலையில் தான் அவர் வீடுகளில் இரண்டாவது முறையாக ரைடு நடைப்பெற்றது. இதே போன்று முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி மீது வேலை வாங்கி தருவதாக சொல்லி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் வழங்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குக்கு எதிராக முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி. ஆனால் உயர்நீதி மன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுப்படி செய்துவிட்டது. தற்பொழுது அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் 6 தனிப்படை அமைத்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

தற்பொழுது அவர் தலைமறைவாக இருப்பதாகவும், காவல்துறை வலைவீசி கைது செய்வதற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வெகு விரைவில் அவர் வேறு ஒரு மாநிலத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகியோ முன்ஜாமீன் பெறுவதற்கு முயற்சி செய்யலாம். அந்த முயற்சியும் தோல்வில் முடியலாம். அல்லது முன் ஜாமீனும் பெற்று ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்வதற்கு தயாராக முன்வரலாம்.
அதற்குள் அவரை காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்று தேடிவருகிறார்கள். இந்த ராஜேந்திர பாலாஜி தான் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்த பொழுது ஜெயலலிதாவை “லேடி” என்றும் பிரதமர் நரேந்திரமோடியை “தாடி” என்றும் அழைத்தவர். இப்பொழுது தலைமறைவாக இருந்து வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.

போகிற போக்கைப் பார்த்தால் அடுத்து நகர்மன்ற தேர்தல் வருவதற்குள் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய கட்சி நிர்வாகிகளும் பலர் கைது செய்யப்படலாம் என்கின்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ரிப்கோ கரன்சி விவகாரம் வெளிநாடு வர்த்தகம் தொடர்புடையது என்பதால் மத்திய அரசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தனது கண்காணிப்பு வளையத்தை போட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ஒருவேளை அதிமுக அமைச்சர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்தால் முக்கிய நிர்வாகிகள் சிறைக்கு சென்றால் அதிமுகவில் பிளவு- ஏற்படும் என்றும் அந்த பிளவினை பயன்படுத்தி பாஜக கட்சி தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைவதற்கு முயற்சி செய்யும் என்றும் கூறப்படுகிறது. திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதன் மூலம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு அதிமுக பலகீனமாகி தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக திமுக வை நாடி ஒடி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் மாநில அரசு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து ஆதாரங்களை திரட்டி முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் இவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு வருவதுடன் முன்னாள் அமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் அதிமுகவின் செல்வாக்கு மேலும் உயர்ந்துவிடும் என்கின்ற காரணத்தாலும் கைது நடவடிக்கையை திமுக தவிர்த்து வருதாக கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெறலாம். அல்லது சோதனை நடைப்பெற்று வழக்கு பதிவு செய்தவர்களை கைது செய்யலாம் என்று அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது அதிமுக. நகர்மன்ற தேர்தலுக்கு முன்பாக கைது படலம் தொடரலாம் அல்லது நகர்மன்ற தேர்தல் தள்ளிப்போகலாம். இதற்கு காரணமாக உருமாறிய ஓமிக்ரான் கொரனா மற்றும் மழை வெள்ளம் பாதிப்பு போன்றவைகளை காரணம் காட்டி நகர்மன்ற தேர்தல்கள் தள்ளிப்போகக் கூடிய வாய்ப்பும் ஏற்படலாம்.

அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் திமுகவில் இணைந்தாலும் தொண்டர்கள் பெரும்பாலும் திமுக தலைமையை ஏற்றுக் கொண்டு திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு பெரும்பாலும் முடிவெடுக்க தயங்குகிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர்வதையே தொண்டர்கள் விரும்புகிறார்கள். இதற்கு இரட்டை தலைமை மற்றும் ஊழல் புகார்கள் அதிமுக தொண்டர்களுக்கும் ஒருவித அச்சத்தை தோற்றுவித்து கொண்டு தான் இருக்கிறது. மாவட்டவாரியாக உள்கட்சி தேர்தலை நடத்தும் பணியில் கட்சி நிர்வாகிகளை ஈடுப்பட்டு சுறுசுறுப்பாக மாவட்ட அளவில் நிர்வாகிகளை தேர்வு செய்வதில் முழு அளவில் கவனம் செலுத்தி தங்கள் ஆதரவாளர்களை வெற்றிப்பெற செய்வதில் குறியாக இருந்து செயல்படுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளுங்கட்சி எதிரான போராட்டத்தில் தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாவட்டந்தோறும் கூடியதும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், தலைவர்கள் மத்தியிலும் திமுக எதிர்த்து அரசியல் நடத்த முடியும் என்பதை தோற்றுவித்துள்ளதாக அதிமுக பிரமுகர்கள், முக்கிய தலைவர்கள் கூறுகிறார்கள்.

– டெல்லிகுருஜி