April 26, 2024

கொரனா காலம் முதுமையை காப்பாற்றுவோம்!

பெரியவர்களை மதிக்கும் பண்பு இப்போது பெரிதும் குறையத் தொடங்கியுள்ளது. பேருந்துகளிலும் வெளியிடங்களிலும் வயோதிகர்கள் ‘ஏ பெரிசு!’ என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் முதியவர்களைக் கிண்டலும் கேலியும் செய்வதைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்த இளைஞர்கள் விரைவிலேயே தங்களுக்கும் வயதாகும் என்ற உண்மையை உணர்வதில்லை பழுத்த இலையைப் பார்த்துப் பச்சை இலைகள் சிரிக்கின்றன. நெடுங்காலம் உயிர்வாழ்வதென்பது ஒரு பேறு, வயதாகிறதே என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால் வயதாவதைப் பற்றிக் கவலைப்படும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இன்று வயதானவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்யும் இளைஞர்களுக்கெல்லாம் நன்கு வயதாகி உலகை விட்டுப் பிரியும் பேறு கிட்டவேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.

வாழ்க்கை பல பருவங்களை உள்ளடக்கியது. அவற்றில் குழந்தைப் பருவமும் முதுமைப் பருவமும் அன்புக்கு ஏங்கும் பருவங்கள். ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் எத்தனை கவனம் செலுத்துகிறாமோ அதே போன்ற கவனத்தை முதியவர்களைப் பராமரிப்பதிலும் செலுத்த வேண்டும்.இன்று மனிதர்களின் மனப்போக்கு முற்றிலும் வணிக மயமாக மாறியிருப்பதால் பொருளாதார ரீதியாக பிரயோஜனமில்லாத முதியவர்கள் பல வீடுகளில் ஒதுக்கப்படுகிறார்கள். எந்தக் கருத்தைச் சொல்லவும் உரிமை இல்லாதவர்களாய் ஓரம் பட்டப்படுகிறார்கள். பெற்ற பிள்ளையே கூடக் கடனே என்று தான் அவர்களிடம் பேசுகிறான். வெறும் உணவு மட்டுமே அவர்களுக்குப் போதுவதில்லை. அன்பான நாலு வார்த்தைகளுக்காக ஒருவேளை உணவையும் அவர்கள் துறக்கத் தயாராக இருப்பார்கள்.பெரியவர்கள் தாங்களே வங்கிக்குப் போக வேண்டியிருக்கிறது. அஞ்சலகத்திற்குப் போக வேண்டியிருக்கிறது. பல வீடுகளில் முதியவர்கள் சம்பளம் இல்லாத வேலைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்கள். பெரியவர்கள் வேலை செய்யாமல் சோம்பேறிகளாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்படியும் அவர்கள் தங்களால் இயன்ற வேலைகளைச் செய்துகொண்டு தான் இருப்பார்கள்.

ஆனால் அந்த வேலையை அவர்களாக மனம் விரும்பிச் செய்யும் சூழல் இருக்க வேண்டும். நாம் பெரியவர்களை வேலை வாங்கக் கூடாது.ஒன்று மட்டும் நிச்சயம். அனுபவத்தை மதிக்காத வீடும் முதியவர்களை மதிக்காத நாடும் முன்னேறாது. முதியவர்களின் அனுபவச் செழுமையை உள்வாங்கிக் கொண்டு இயங்கும் போது தான் நாம் அதிக வெற்றிகளை அடைய முடியும். பெரியவர்களை மதிப்போம். பண்பாட்டை வளர்ப்போம்.குறிப்பாக ‘கொரனா’ காலத்தின் போது பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மிகமிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இது மட்டும் அல்லாமல் பெரியவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதை விட, அப்பா அம்மா, மாமா, அத்தை, அக்கா, தங்கை, சகோதரன், என்ற உறவுகளை நினைத்து முதியவர்களை பாசத்தால் பாதுகாப்போம். குறிப்பாக கொரனா நோய் கிருமி எந்த வழியில் பரவும், எவரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியாது.இன்னும், கொடிய நோய் கொரனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியாத நிலையில், உலகம் முழுவதும் அச்சத்தில் உரைந்து கிடக்கும் காலத்தில் இல்லந்தோறும், முடங்கிக்கிடக்கும் பொதுமக்கள், பாதுகாப்புடன் இருப்போம். மற்றவர்களையும் பாதுகாப்புடன் பாதுகாப்போம் இது கொரனா காலம் கொரட்டை விட்டால் ஆபத்து விழித்திருப்போம்! வீட்டில் இருப்போம்!