May 5, 2024

விஷச்சாராயம் குடித்ததில் 15 பேருக்கு கண் பார்வை பாதிப்பு- 62 பேருக்கு தீவிர சிகிச்சை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு விற்கப்பட்ட விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 பேரும், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேரும் என மொத்தம் 62 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு மற்றும் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறைகள் 2 முறை அளிக்கப்பட்டபோதிலும் அவர்களது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மற்ற அனைவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களது குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர்கள் உயிரிழக்கக்கூடுமோ? என்ற அச்சத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் உறைந்து போயுள்ளனர். எனவே உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதற்கேற்ப உரிய சிகிச்சைகளை அளிக்குமாறும், அல்லது மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை செய்தது பற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். அப்போதே போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் ஏற்பட்டிருக்காது. காலை, மாலை, இரவு என்று 3 வேளையும் சாராயம் விற்றனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவே இல்லை என்றனர்.