April 26, 2024

மார்ச் 10-ல் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10.03.2022 முதல் 12.03.2022 வரை உள்ள நாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொள்வார்கள்.

அரசு கடந்த பத்து மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஆளுநர் உரை, முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு மற்றும் சட்டமன்ற பேரவை விதி எண். 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை, அமைச்சர் பெருமக்களால் மானிய கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என மொத்தம் 1,704 அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டு, அதில் 80 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளின் கீழ் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டை, மாவட்ட ஆட்சித்தலைவர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும், அவற்றை மேலும் சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இதுவரை வனத்துறை அலுவலர்கள் முதலமைச்சரின் ஆய்விலோ மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வனத்துறை தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள்.

இந்த மூன்று நாட்கள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்வார்கள்.

மேலும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வாயிலாக அறிந்து, அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.