April 26, 2024

மழலைப் பேறு அருளும் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்

[responsivevoice_button voice=”Tamil Male”] திருவிரிஞ்சை மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் கோயில், வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரத்தில் 1300 வருட பழமையான சிவன் கோயிலாகும். சிறப்பு பெற்றச் சிவ ஸ்தலங்கள் ஆயிரத்து எட்டு மிகவும் பிரசித்தி பெற்றச் சிவ ஸ்தலங்கள் நூற்று எட்டு. இவற்றுள் மிகவும் விசேஷமான சிவ ஸ்தலங்கள் பதினெட்டு, அந்த பதினெட்டு சிவ ஸ்தலங்கள் விரிஞ்சிபுரமும் ஒன்றாகும். மூலவரான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக வடகிழக்கு திசையில் சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். பிரம்மனுக்கு ஞானோபதேசம் அருளியதால் மார்க்க சகாயர் என்றும், மிளகு வணிகர் ஒருவருக்கு வழித்துணையாக சென்றதால் வழித்துணை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

“திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு, திருவிடை மருதூர் தெருவழகு, திருவிரி…சை மதிலழகு” என்ற சொல் வழக்கத்திற்கு ஏற்ப திருவிரிஞ்சை கோயில் மதில் உயர்ந்து, அழகாக உள்ளது, எனவே இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது. திருமணதடை, குழந்தைபேறு அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாகவும் இது விளங்குகிறது.

ஸ்தல வரலாறு

தலைமுடி சாய்ந்த ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்:

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற சிவபெருமானின் திருமுடியைக் திருவடியைக் காண முடியாத பிரம்மா, விரிஞ்சிபுரத்தில் மனிதப் பிறவி எடுத்து மார்க்கபந்தீஸ்வரர் திருமுடியைத் தரிசித்தார். அவருக்காக சிவபெருமானே தலையை வளைத்து அருளினார் என்பது ஸ்தல புராண சிறப்பாகும். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஊர் ‘விரிஞ்சிபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகருக்கு சிவசர்மன் என்ற பெயரில் மகனாக பிறக்க, தக்க தருணத்தில் சிவபெருமானே வந்து சிவசர்மனுக்கு உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெயரும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. பின்னாளில் சிவசர்மன் லிங்கத்திற்கு (லிங்கம் உயரமாக இருந்ததால்) அபிஷேகம் செய்ய முடியவில்லை என்று வருந்தினான். சிவசர்மனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். திருவண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். இந்த ஸ்தலத்தில் தான் சிவபெருமானின் திருமுடியை பிரம்மன் கண்டார். அதே கோலத்தில் இன்றும் தலைமுடி சாய்ந்த மகாலிங்கமாக ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் காட்சி தருகிறார்

சிவபெருமானின் திருமுடியை பிரம்மன் கண்ட சிறப்பு மிக்க நாள் தான் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும். இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.

வழித்துணை நாதர்

இறைவன் தன்னை அடைக்கலமாகக் கொண்ட பக்தர்களுக்கு வழித்துணையாக இருப்பார்’ என்ற பெரியோர்கள் சொல்லிற்கிணங்க வழித்துணை நாதராக சிவபெருமான் அருள்பாலிக்கும் திருத்தலம் விரிஞ்சிபுரம் ஆகும். மைசூரைச் சேர்ந்த வணிகர் ஒருவர், இத்தலத்தின் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் செல்லும் வேளையில், இத்தலத்தில் அந்த வணிகர் இரவு தங்க நேரிட்டது. இத்தலத்து சிவபெருமானை வழிப்பறி திருடர்களிடம் இருந்து தன்னைக் காக்கும் படி வேண்டினார். சிவபெருமான் ஒரு வீரன் வடிவில் அவருக்கு துணையாக வந்து அவர்களிடமிருந்து மிளகு மூட்டைகளைக் காப்பாற்றிக் கொடுத்ததுடன், காஞ்சிபுரம் வரை வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதற்கான காணிக்கையாக மூன்று மிளகு பொதிகளை விற்ற பணத்தை காணிக்கையாக செலுத்தினார் அந்த வணிகர். எனவே இந்த ஸ்தல சிவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்றும் பெயர் வந்தது. இப்போதும் அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் “பார் வேட்டை” என்ற பெயரில் கோவிலில் இச்சம்பவத்தை நடித்துக் காட்டுகிறார்கள்.

கல்வெட்டும், சிற்ப வேலைப்பாடுகளும்

கல்வெட்டு:

விரிஞ்சிபுரத்தைப் பற்றிய பதினெட்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் இரண்டாம் நந்தி வர்ம பல்லவனின் (கி.பி . 731-796 ) ஆட்சிக் காலத்தில் இறைவனுக்குத் திருவிளக்கு ஏற்றுவதற்கும் கோயில் கட்டுமானத்திற்கும், வளர்ச்சிக்கும் நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டதாகவும், மற்றும் இத்தலத்தை சுற்றிலும் பல்லவர்களின் கல்வெட்டுகளும், சோழர்களின் கல்வெட்டுகளும், பாண்டியர்களின் கல்வெட்டுகளும், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகளும் மற்றும் கர்நாடக முதலாம் வேங்கடபதி கல்வெட்டுகளும் உள்ளன. பல்லவ மன்னர், சோழ மன்னர், விஜய நகர மன்னர்கள், சம்புவராய மன்னர் உள்ளிட்டோர் இத்தல இறைவனை வழிபட்டது குறித்த குறிப்பு கல்வெட்டுகளில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இந்தக் கல்வெட்டுகள் விரிஞ்சிபுரத்தின் தொன்மையையும், சிறப்பையும் விளக்குகின்றன.

சிற்ப வேலைப்பாடுகள்

ஆலயம் முழுதும் மண்டபங்களிலும், தூண்களிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்திருப்பதை காணலாம். கலைநயக் கட்டிடம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் சோழர்களின் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் உள்ளது

ஸ்தல அமைப்பு

இராஜகோபுரம் ஆன கீழ்கோபுரம் வாயில் ஏழு நிலைகளைக் கொண்டு ஒன்பது கலசங்களுடன் நூற்று பத்து அடி உயரம் உடையதாக, மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மற்றும் மேல் கோபுர வாயில், திருமஞ்சன வாயில் என்று முறையே கிழக்கு, மேற்கு, வடக்குப் புறங்களில் வாயில்கள் இருப்பினும் தென்புறம் மட்டும் வாயில் இல்லாமல் மதில்மேல் கோபுரம் மட்டும் உள்ளது . நாள்தோறும் இராக்காலங்களில் தேவர்கள் வந்து சிவபெருமானை பூஜை செய்து விட்டுப்போவதால் அவ்வழி தேவர்க்காக ஏற்பட்டதாகவும் அதனால் மானிடர்யாரும் அப்பக்கம் செல்ல வழி ஏற்படுத்தவில்லை என்பது ஐதீகம். இத்தலத்தினைச் சுற்றி மதிற் சுவர்கள் சுமார் அறுபது அடி உயரத்தில் மிக்க எழிலுடன் பார்ப்பவர்கள் கண்ணைக் கவரும்வண்ணம் காட்சி அளிக்கிறது . கோயிலின் உள்ளே இருந்து வெளிமதில் வரையில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன . வெளிமதில் பிரகாரத்தில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தமும், தீர்த்தக்கரையில் பிரம்ம புரீஸ்வரர் ஆலயமும் தீர்த்தவாரி மண்டபமும் உள்ளன. கிழக்கு வாயிற்கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றதும் முன்னே இடது பக்கம் சக்தியின் பல அவதாரங்களைச் சிற்பங்களாகத் தன்னிடத்தே கொண்ட நாற்கால் மண்டபமான சக்தி மண்டபமும் அதை அடுத்து மேற்கே பதினாறுகால் மண்டபமும் அதற்குத் தெற்கில் சுமார் இருபது அடி உயர சிம்ம நுழைவாயில் படித்துறையுடன் சிம்ம தீர்த்தமும் உள்ளன.

சிவபெருமான் திருமுடி வளைத்த வரலாற்றுச் சிற்பங்-களுடன் தென்மேற்கிலும் வடமேற்கிலும் இதர அபூர்வ சிற்பங்களும் கொண்ட திருக்கல்யாண மண்டபங்களும், இவைகளுக்கு இடையே சிந்தூர கணபதி, ஆயிரத்து எட்டு சிவலிங்க சந்நிதிகளும் இருக்கின்றன. நூற்றுக்கால் திருமண மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தில் கற்சிலையில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் சிலை உள்ளன. வடமேற்கு கல்யாண மண்டபத்துக்கும் வடகிழக்கு நூற்றுக்கால் மண்டபத்துக்கும் நடுவில் சூலி தீர்த்தம் வசந்த நீராட்டக் கட்டம் காலம் காட்டும் கல் ஆகியவற்றையும் நூற்றுக் கால் மண்டபத்துக்கு முன்னால் மேற்கே கால பைரவ சந்நிதியையும் கண்டபின் கிழக்கு கோபுர வாயிற்கு நேரே கிழக்கே முன்னால் உள்ள பலிபீடம், துவஜஸ்தம்பக் கம்பம், மஹா நந்தியையும் கடந்து சம்புவராய வாயிற் படியையும் தாண்டி கோயிலுக்குள்ளே போகும்-போது ஸ்ரீ ஏரம்ப விநாயகரையும் ஸ்ரீ தண்டபாணியையும் தரிசிக்கலாம். கோயிலுனுள் இரண்டாம் பிரகாரத்தில் சுவர்ண கணபதி, ஸ்ரீராமலிங்க அடிகளார், நவக்கிரகம், சனீஸ்வரர் மற்றும் சுதையால் ஆகிய அழகிய பிட்சாடனர், வல்லபை கணேசர், உற்சவ மூர்த்திகள் சந்நிதிகளும், மேற்கே ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீ பஞ்சமுக சதாசிவலிங்கமும் காசிலிங்கம் சந்நிதி, சோமதீர்த்தம், வடக்கே சூரிய பகவான், நூற்று எட்டு லிங்க சந்நிதி உள்ளன. இத்திருத்தல விருட்சமான பனைமரம் மற்றும் இப்பிரகாரத்தில் பதினொறு பலிபீடமும் உள்ளன.

இப்பிரகாரத்தின் வடமேற்கே மரகதவல்லி அம்மன் சந்நிதி இருக்கிறது சுற்றுப் பிரகாரத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரி, காலபைரவர் சந்நிதிகள் இருக்கின்றன. அம்பாள் சந்நிதிக்கு நேர் கிழக்கே தெற்கு நோக்கி ஸ்ரீ நடராஜர் சந்நிதி உள்ளது. கோயிலினுள் மூன்றாம் பிரகார ஆரம்பத்தில் நிர்த்த மண்டபத்தில் ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர், நால்வர் சந்நிதிகளையும் துவாரக பாலர்களையும் தாண்டி உள்ளே சென்றால் நிருத்தன கணபதி தட்சிணாமூர்த்தி, சப்த கன்னிகை, லெக்ஷ்மி, சரஸ்வதி, வாசுதேவப் பெருமாள், பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் முதலிய மூர்த்திகள் உள்ளன . கடைசியாக மேற்கண்ட பிரகாரங்களை வலம் வந்து பின் மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபத்தைக் கடந்து கர்ப்பக்கிரகத்தில் சுயம்புலிங்க மூர்த்தியான சிவபெருமான் அருள்மிகு வழித்துணை நாதர் மிகவும் கம்பீரமாக ஆறு அடி உயரத்திற்கு சற்றுச் சாய்ந்து நமக்கு அருள் பாலிக்கிறார். கருவறை கஜப்பிரஷ்டை அமைப்புடையது.

அம்பாள் கர்ப்பக் கிரகம் பாதாள அறையுடன் கூடியது இவ்வறை வழியாகத்தான் வேலூர்க் கோட்டை கோயிலுக்கு எட்டு மைல் தொலைவுக்கு கற்களால் அமைக்கப்பெற்ற பாதாள வழி இருந்ததாகவும் தற்போது தூர்ந்து போய் விட்ட-தாகவும் செவி வழி செய்திகள் உள்ளன.

பாடல் பெற்ற திருத்தலம்

இத்தலத்து சிவபெருமானை பற்றி திருநாவுக்கரசர் திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடியிருக்கின்றனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனைப் பற்றி தம் திருப்புகழில் பாடியிருக்கிறார். இத்தலத்தில் தான் மகான் அப்பைய தீட்சிதர் என்பவர் அவதரித்தார். இவர் மார்கபந்து ஸ்தோத்திரம், மார்க்க சகாய லிங்க ஸ்துதி ஆகியவற்றை வழங்கி உள்ளார். இவ்விரண்டும் பெரும் சக்தி வாய்ந்தன. சிவ ரகசியம், பிரம்மாண்ட புராணம், காஞ்சீ புராணம், காளத்தி மான்மியம், அருணகிரி புராணம் ஆகிய நூல்களில் இந்தத் திருத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்தல விருட்சம்

இந்த கோயிலின் ஸ்தல விருட்சம் பனை மரம். இத்தலத்தில் உள்ள பனை மரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கருமையான காய்களையும் காய்ப்பது இங்கு விஷேசம்.

ஸ்தல தீர்த்தம்

இத்தலத்து சிம்ம தீர்த்த குளம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் இன்றி தவிப்போர் இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வேண்டினால் குறிப்பிட்ட காலத்திலேயே குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இவைத் தவிர சூலி தீர்த்தம், சோம தீர்த்தம் என வேறு இரு தீர்த்தக்குளங்களும் இங்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்தல சிறப்புகள்

1. சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஒரு லிங்கத்தில் அமையப்பட்ட ஸ்தலம். இதனை இரண்டாம் பிரகாரத்தில் காணலாம்

2. மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியக் கதிர்கள் விழுகின்றன.

3. “நேரம் காட்டும் கல்” இக்கோவிலில் சூரிய மற்றும் சந்திர கடிகாரங்கள் அர்த்த சந்திரவடிவில் பு முதல் 6 வரையும், 6 முதல் புசு வரையும் எண்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம் பகலிலும்,இரவிலும் துல்லியமாகக் காட்டும்.

4. இக்கோவிலில் நூற்று எட்டு லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும், ஆயிரத்து எட்டு லிங்கங்கள் ஒரே லிங்கத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றை வழிபடின் ஒரே நேரத்தில் நூற்று எட்டு மற்றும் ஆயிரத்து எட்டு லிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

திருவிழாக்கள்

இந்த கோயிலில் பல விசேஷ உற்சவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. சித்திரா பௌர்ணமியில் வசந்த விழா, வைகாசி விசாகம், ஆனி உத்திரத்தில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம், பத்து தினங்கள் தேரோட்டத்துடன் ஆடிப்பூர விழா, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. கார்த்திகை மாதத்தில் கடை ஞாயிறு பெரு விழா இந்தத் திருத்தலத்தின் தனிச் சிறப்பான உற்சவம். அன்றைய தினம் பாலக பிரம்மாவான சிவ சர்மனுக்கு இறைவன் உபநயன சிவ தீக்ஷ அருளிய விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

கார்த்திகை கடை ஞாயிறு விழா

இத்தலத்தில் முற்பிறவிச் செய்கையால் இப்பிறவியில் அல்லல்படுவோர் கார்த்திகை கடை ஞாயிறு விழாவில் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெறலாம்.”முதல் நாள் சனி இரவு அன்று இங்கு வந்து எம்மை மனத்தால் நினைந்து வணங்குவோர்க்கு இம்மை மறுமை இரண்டிலும் நற்கதி அருள்வோம்‘ என்று இத்தல இறைவன் அருளியதாக எல்லப்ப நாவலரின் திருவிரிஞ்சை புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கார்த்திகை கடை ஞாயிறு விழா, முதல் நாளான சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிறு இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிம்மக்குளத்தில் நீராட உள்ளவர்கள், சனிக்கிழமை மாலை மூன்று மணிக்குள் ஆலயம் வர வேண்டும். அப்போதுதான் அன்று நள்ளிரவில் நீராட வசதியாக இருக்கும். பிரம்மன் சாப விமோசனம் பெற்ற நாள் கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை. ஒவ்வொரு ஆண்டும் அதே நன்னாள் இரவில் பெண்கள் அம்பிகை, பிரம்மன் ஆகியோர் நீராடிய சிம்ம குளத்தில் ஒவ்வொருவராக குளத்தில் இறங்கி நீராடி கையில் தேங்காய் பழம் உடன் ஈர வஸ்திரத்துடன் கோயிலில் சென்று குப்புறப்படுத்து இறை சிந்தனையுடன் இருப்பர். அவர்கள் கனவில் இறைவன் தோன்றி அருள் செய்து அவர்களின் குறையை நீக்கி பிள்ளைப் பேறு தருவார் என்பது ஐதீகம். இப்படி வேண்டிக்-கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

கோயிலுக்கு செல்லும் வழி:

சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் வேலூரிலிருந்து 15 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பேருந்து மூலம் வருபவர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்லும் பேருந்துகளில் பயணம் செய்து சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இத்தலத்திற்கு நேரடியாக இயக்கப்படுகின்றன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன.

இரயில் மூலம் வருபவர்கள் காட்பாடி சந்திப்பிலிருந்து இறங்கி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

இந்த கோயில் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தரிசன பலன்கள்

இங்குள்ள சிம்ம தீர்த்தத்தில் நீராடினால் அவர்களை பிடித்த தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் வணங்கி பயணம் இனிதாக அமைய வேண்ட இறைவன் கண்டிப்பாக வழித்துணையாக வருவான் என்பது திண்ணம். மேலும் ஜாதகத்தில் வாகன விபத்து கண்டங்கள் உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபடின் விபத்து கண்டங்களிலிருந்து இறைவனால் காக்கப்படுவர் என்பது ஐதீகம். ஜாதகத்தில் விபத்து கண்டம் உள்ளவர் இத்தலத்திற்கு வர இயலவில்லை என்றாலும் இத்தலத்து இறைவனைப் பற்றி பாடப்பெற்ற மார்க்கபந்து தோத்திரத்தை தினமும் படித்து வந்தால் விபத்து கண்டங்களிலிருந்து காக்கப்படுவார். இத்தலத்தில் அம்பாள் மரகதவல்லி பெரும் கருணை கொண்டவள். இவளை வழிபடின் குறைவில்லாத வாழ்வு உண்டாகும் என்பது திண்ணம். விரிஞ்சிபுரம் வந்து வழித்துணை நாதரான மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் வணங்கி எல்லா வளமும் பெறுவோம்…

தென்னாடுடைய சிவனே போற்றி.

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

ஓம் மார்க்கபந்தீஸ்வராய நமஹ !!

[Best_Wordpress_Gallery id=”4″ gal_title=”மார்க்கபந்தீஸ்வரர்”]