April 25, 2024

பசியைப் போக்கும் பொற்கோவில்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனிதத் தலமாக இது வழிபடப்படுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே, இரவு- பகலாக மிகப் பிரமாண்டமான சமையலறை இயங்குகிறது. இது இந்தியாவில் உள்ள மிகப் பெரிய சமையல் அறைகளில் ஒன்று. இதனை ‘குரு கா லாங்கர்’ என்று அழைக்கிறார்கள். அனைவருக்கும் உணவளிக்கும் இந்த திட்டத்தை சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நடைமுறைப்படுத்தினார். சீக்கிய மதத்தின் மூன்றாவது குருவான அமர்தாஸ் ஜீ, இந்த திட்டத்தை விரிவுபடுத்தினார். ஒவ்வொரு வாரமும் ஒரு சீக்கிய குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ சேர்ந்து உணவுக்கான செலவுகளை ஏற்கிறார்கள். வெளியில் இருந்து எந்த உணவும் பெறப்படுவதில்லை. அனைத்து உணவும் இங்கேயே சமைத்து பரிமாறப்படும்.

தினமும் 1,500 கிலோ அரிசியில் உணவு தயாரிக்கப்படுகிறது. அதோடு 12 ஆயிரம் கிலோ கோதுமை மாவில் ரொட்டியும் சுடுகிறார்கள். 2 ஆயிரம் கிலோ காய்கறிகளைக் கொண்டு கூட்டும், 13 ஆயிரம் கிலோ பருப்பு கொண்டு குழம்பும் தயார் செய்கிறார்கள். தவிர, 5 ஆயிரம் லிட்டர் பால், ஆயிரம் கிலோ சர்க்கரை, 500 கிலோ வெண்ணெய் கொண்டு ‘கீர்’ எனப்படும் இனிப்பு தயார் செய்யப்படுகிறது. * சமையல் அறையில் தினமும் 2 லட்சம் ரொட்டிகளை சுட்டு எடுக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் ரொட்டிகளை சுட்டெடுக்கும் இயந்திரம் இங்குள்ளது. * சமையல் செய்வதற்காக தினமும் 100 கியாஸ் சிலிண்டர்கள் காலியாகிறதாம். அதோடு 5 ஆயிரம் கிலோ கரியும் பயன்படுத்தப்படுகிறது.

  • சமையல் பணியில் 450 நிரந்தரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களோடு ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும், சப்பாத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற பணியில் ஈடுபடுவார்கள். * மிகப் பெரிய அண்டாக்களில் உணவு தயார் செய்யப்படும். இங்கு இரண்டு உணவுக் கூடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உணவுக்கூடத்திலும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். * உலகிலேயே 24 மணி நேரமும் இயங்கும் சமையல் அறை, இந்த பொற்கோவில் சமையல் அறையாகத்தான் இருக்கும். இங்கு சுழற்சி முறையில் உணவு தயாரிப்பு நடந்துகொண்டே இருக்கிறது. உணவு பரிமாறும் பணியிலும் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகின்றனர். * இங்கு சுமார் 3 லட்சம் பிளேட்டுகள், டம்ளர்கள் உள்ளன. இவற்றை சுத்தம் செய்யும் பணியிலும் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த தன்னார்வத் தொண்டர்களை ‘சேவாதர்ஸ்’ என்று அழைக்கிறார்கள். * மிகத் தரமானதாகவும், சுத்தமான முறையிலும் தயாரிக்கப்படும் இந்த உணவை, யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வாங்கிச் சாப்பிடலாம்.