April 26, 2024

சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் டெல்டா பிளஸ் கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிற்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பரவலான கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும்.

டெல்டா பிளஸ் கொரோனா, நுரையீரலை கடுமையாக பாதித்து உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மை கொண்டதாகும். ஆகையால், பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை போன்றே டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ள குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அரியானா ஆகிய மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.