April 16, 2024

அரசு விரைவு பஸ்சில் சொந்த ஊருக்கு சென்றால் திரும்பி வரும்போது டிக்கெட்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி

சென்னை: அரசு விரைவு பஸ்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- 300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் புதிய சலுகையை வழங்கி வருகிறது. பயணிகள் நீண்ட தூர பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமைச்சர் சிவ சங்கர் சட்ட சபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரேநேரத்தில் சொந்த ஊர்களுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ சென்று வருவதற்கான டிக்கெட்டை இணையதளம் முலம் முன்பதிவு செய்தால் திரும்பி வருவதற்காக டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் விழா நாட்களில் இந்த சலுகை பொருந்தாது. இதர நாட்களில் இந்த சலுகை கிடைக்கும்.

இந்த சலுகையை பெற விரும்பும் பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc என்ற செல்போன் செயலியை அணுகி பலன் பெறலாம். அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தின் கீழ் அதி நவீன மிதவை பஸ், குளிர் சாதன பஸ், குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ், கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ்கள் என மொத்தம் 1082 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 251 வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பஸ்களிலுமே பயணிகள் சலுகையை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.