October 11, 2024

திருப்பதியில் ரதசப்தமி: ஏழுமலையான் வீதி உலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இன்று ஒரேநாளில் ஏழுமலையான் தனித்தும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரதசப்தமி விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே குவிய தொடங்கினர். இதனால் 4 மாட வீதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கிறது. ரதசப்தமியொட்டி கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டது. திருப்பதியில் நேற்று 59,695 பேர் தரிசனம் செய்தனர். 30,286 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.