October 11, 2024

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்

கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா முதல் அலை பரவலின்போது ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாகவே கொரோனா பாதிப்பு குறைந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ரஷியா நிறுவனம் தயாரித்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கட்டணம் அடிப்படையில் பொதுமக்களுக்கு போட்டு வருகின்றன.

தடுப்பூசியை பொறுத்தவரை முதலில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும், பிறகு 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் போடப்பட்டது.

தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா 3-வது அலை பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

ஆனால் தடுப்பூசி திட்டத்தை பொறுத்தவரை நாடு மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்தியாவில் இதுவரை 36 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் மத்தியில் கொரோனா 3-வது அலை அச்சம் எழுந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கவும், அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையிலும் 65.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

கோவேக்சின் தடுப்பூசி – கோவிஷீல்டு தடுப்பூசி

தற்போது தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்குகிறது.

அதே போல் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 28.5 கோடி கோவேக்சின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது.

இதற்காக 2 நிறுவனங்களிடமும் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது முதல் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்த தடுப்பூசிகளை 2 நிறுவனங்களும் தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு இந்த தடுப்பூசிகளை வாங்கி மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யும். அதன் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்கப்படும்.

கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை ரூ.215 என்ற நிலையில் மத்திய அரசு வாங்குகிறது. இதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்படுகிறது.

எனவே அடுத்த 5 மாதங்களில் மாநில அரசுகளுக்கு 65.5 கோடி கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பிற நிறுவனங்கள் மூலம் தனியாருக்கு கிடைக்கும் தடுப்பூசிகளும் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.