October 11, 2024

சீன உளவுக் கப்பல் புறப்படுகிறது- இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு

கொழும்ப: சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 நேற்று இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. வருகிற 22-ந் தேதி வரை இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அந்த உளவு கப்பலுக்கு எரி பொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. நாளையுடன் எரிபொருள் நிரப்பப்பட்டு விடும் என்று தெரிகிறது.

எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை காலை இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சீன உளவு கப்பல் வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.

அதை சீன உளவு கப்பல் ஏற்றுக்கொண்டாலும் அது ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அந்த கப்பல் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தது. இலங்கைக்கு வந்துள்ள சீன உளவு கப்பலின் முக்கிய நோக்கமே இந்திய பெருங்கடலில் உள்ள வசதி வாய்ப்புகளை அறிந்து கொள்ளதான். இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.

தற்போது இலங்கையிலும் அத்தகைய ராணுவ தளத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு சீன உளவு கப்பலின் வருகை தொடக்கமாக இருப்பதாக இந்திய ராணுவ மூத்த அதிகாரிகள் கருதுகிறார்கள். இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து சீன ராணுவ கப்பல்கள் வருவது அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட சீன உளவு கப்பல் 3 நாட்களில் புறப்படுவதால் மத்திய அரசு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்த உளவு கப்பல் ஏதேனும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பதை அறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உலகின் மிகப்பெரிய கடற்படையை வைத்திருக்கும் நாடு என்ற சிறப்பு சீனாவுக்குத்தான் உள்ளது. 355 போர் கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. ஏராளமான நீர் மூழ்கி கப்பல்களையும் சீனா வைத்துள்ளது. இவை அனைத்தையும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை நிறுத்த சீனா துடிக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உளவு கப்பலை அனுப்பி சீனா ஆட்டத்தை தொடங்கி உள்ளது.