October 11, 2024

சீனாவில் கொரோனா எழுச்சி வேகமாக உள்ளது- உலக சுகாதார அமைப்பு கவலை

நியூயார்க்: சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளன. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து உலக நாடுகள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறியதாவது:- சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை அடைந்து உள்ளது. சீனாவில் நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தி உள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள கூடியது. சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து விளக்கம் அளிக்க அந்நாடு முன்வர வேண்டும். இது குறித்தான விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிக்கவும் தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். மருத்துவ பராமரிப்பு அதன் சுகாதார அமைப்பை பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.