September 18, 2024

கார்த்திகை தீப விழா- திருவண்ணாமலைக்கு 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபத்தை காண வருவார்கள். கொரோனா பாதிப்பால் 2 வருடமாக கார்த்திகை தீபம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 7-ந்தேதி பவுர்ணமியாகும். 2 சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். 6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.

இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, செஞ்சி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்கள் டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.