September 26, 2023

ஒருநாள் தரவரிசை பட்டியல் – நம்பர் ஒன் இடத்தை இழந்தது இந்தியா

புதுடெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் போட்டியை வென்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதற்கிடையே, 3-வது ஒருநாள் போட்டி தொடங்கும் முன், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரை இந்தியா இழந்ததுடன், நம்பர் ஒன் இடத்தையும் இந்திய அணி இழந்துள்ளது. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து நீடிக்கிறது.