October 11, 2024

அக்டோபர், நவம்பரில் உச்சம் தொடும்: கொரோனா 3-ம் அலையால் பாதிக்கப்படும் பகுதிகள்

நோய் எதிர்ப்பு திறன் 80 சதவீதம் மக்களின் உடலில் வந்து விட்டால், அலைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே அமையும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

நாடு முழுவதும் கொரோ னாவின் 2-ம் அலை முடிவுக்கு வந்ததும், 3-வது அலை பரவல் உருவாகும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

அகில இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார் கூறியிருப்பதாவது:-

3-வது அலை வரவே கூடாது என்பது அனைவரின் விருப்பம். முன்னொரு காலத்தில் காலரா, பிளேக், வைசூரி, அம்மை போன்ற பல கொடிய நோய்களால் ஏற்பட்ட பாதிப்பை போன்று தற்போது கொத்துக்கொத்தாக நமது கண்முன்பு அந்நிகழ்வுகளை கொரோனாநோய் கொண்டு வருகின்றது.

அதோடு கருப்பு பூஞ்சை நோயும் நம்மை கதிகலங்க வைக்கின்றது.

2020 பிப்ரவரியில் இந்தியாவில் முதல் கொரோனா அலை தொடங்கியது. செப்டம்பர் மாதம் உச்சமடைந்து 2021 ஜனவரியில் சமநிலை அடைந்தது. 2-ம் அலை 2021- மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் உச்சத்தை அடைந்தது. தற்போது சமநிலை அடைந்துள்ளது.

3-வது அலை ஆகஸ்டு மாத கடைசியில் ஆரம்பித்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஆரம்பத்தில் உச்சம் அடைய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

முதல் அலையை விட 2-ம் அலையின் கொடூர தாக்கம் அதிகமாக இருந்தது. நோயின் தீவிர தன்மையும், சுவாச உறுப்புகள் செயல் இழப்பு மற்றும் இறப்பு ஆகியவை பல மடங்கு அதிகமாக காணப்பட்டது. அரசாங்கத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் நமது உற்பத்தி திறனை விட மருந்துகள், உபகரணங்கள், ஆக்சிஜன் போன்றவை அதிகம் தேவைபட்டதால் மிகவும் சிரமம் ஏற்பட்டது. 30 வயது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களையே அதிகம் தாக்கியது.

ஒவ்வொரு அலையிலும் இந்த வைரசுக்கு எதிரான ஊரடங்கு போன்றவற்றாலும் மக்களுக்கு வைரசை தாக்க கூடிய எதிர்ப்பு சக்தி கிடைப்பதாலும், தடுப்பூசி போட்டு கொள்வதாலும், வைரஸ் மீண்டும் பெருக முடியாமல் குறைய தொடங்கும்.

அலைகளின் இடைபகுதியில் வைரஸ் தொற்று பரவுவது குறையும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த வைரஸ், மரபணு மாற்றம் அடைந்து அதனுடைய எண்ணிக்கை பண்புகள், தாக்கும் திறன், பெருகும் திறன், பெருகும் தன்மை, போன்றவைகளை அதிகரித்து கொண்டு மீண்டும், அதிவேகமாக மக்களை தாக்குவதால் மீண்டும் ஒரு அலை ஏற்படுகின்றது.

இவ்விரண்டு அலைகளிலும் வைரஸ் மனிதனை தாக்கும் போது வைரசுக்கு எதிராக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி ஆகின்றது.

திருடனை காவல்காரன் தாக்குவது போல வைரசை மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தாக்கி அழித்து விடுகிறது.

இந்த நோய் எதிர்ப்பு திறன் வைரஸ் உடலில் புகுந்து நோய் ஏற்பட்டவர்களுக்கும், நோய் வெளியே தெரியாமல் உடலில் வைரஸ் புகுந்தவர்களுக்கும் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் உடலில் உருவாகின்றது. மனிதர்களின் உடலில் இந்த நோய் எதிர்ப்பு திறன் உற்பத்தியாகிவிட்டால் அந்த உடலை வைரஸ் தாக்கி வெற்றி பெறுவது கடினம்.

இதைதான் சமூகத்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்று கூறுகின்றோம்.

பொதுமக்களுக்கு இடையே இந்திய மருத்துவ ஆராய்சி கழகம் நடத்திய நோய் எதிர்ப்பு திறன் குறித்த ஆய்வில் 2020 மே மாதம் 1 சதவீதமாக இருந்த நோய் எதிர்ப்பு திறன், 2020 ஆகஸ்டு மாதத்தில் 6.6 சதவீதமாகவும், 2021 ஜனவரியில் 20 சதவீதமாகவும்,2021 ஜூலையில் 67 சதவீதமாகவும் அதிகரித்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நோய் எதிர்ப்பு திறன் 80 சதவீதம் மக்களின் உடலில் வந்து விட்டால், அலைகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே அமையும் என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.

ஆனால் இடையிடையே அங்கு மிங்கும், சில மனிதர்களை தாக்கி செல்லும். ஆகவே நாம் அனைவரும் இணைந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கு மேல் நோய் எதிர்ப்பு திறனை கொண்டு வந்துவிட்டால் கொரோனா போரில் மனித குலம் 100 சதவீதம் வெற்றி அடைவோம் என்பதில் சந்தேகமில்லை.

முதலாவது அலையில் சுமார் 11 சதவீத குழந்தைகள் தான் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் 2-ம் அலையில் சுமார் 30 சதவீத குழந்தைகள் பாதிப்புக்குள்ளானர்கள். இதை பார்க்கும் போது 3-ம் அலையில் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பது இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்தின் கணிப்பு.

கொரோனா வைரஸ் உருமாறும்போது அதனுடைய எண்ணிக்கை, தொற்றும் தன்மை, அதன் வீரியம் மற்றும் நோயின் தாக்கங்கள் பலமடங்கு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை உடையவர்களையும் சமாளித்து அவர்களையும் கூட தாக்கும் அளவுக்கு டெல்டா பிளஸ் எனும் உருமாறிய வைரஸ், அதன் தன்மைகளை மாற்றியுள்ளது.

2-ம் அலையின் தாக்கத்தின் போது ஏற்பட்ட நெடுநாள் கோவிட் பல வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை மனிதனை பாதிக்கும் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இதன் அறிகுறிகள் 4 வாரம் முதல் 3 மாதங்கள் வரை லேசான காய்ச்சல், உடல் வலி, சுவாசக் கோளாறு, நெஞ்சில் பாரம், இருமல், அதிக சோர்வு, மூட்டுவலி, தலைவலி, தூக்கமின்மை மற்றும் கனவுதன்மை, மன சிதைவு தொடர்வது ஒரு புது தன்மையாக காணப்பட்டது.

குழந்தைகளை தாக்க கூடிய வாய்ப்பு 3-ம் அலைக்கு அதிகம் என்பதால் குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் படுக்கைகள், தீவிர குழந்தை சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகள், படுக்கைகள் போன்றவற்றை இப்போதே நாம் தயார்படுத்தி வருகிறோம்.

போதிய குழந்தை சிகிச்சை மருத்துவர்கள், 3-ம் அலையில் இல்லை என்ற நிலை வராமல் தடுக்கும் முறையில் அரசும், மருத்துவர்களும் இறங்கி உள்ளனர்.

அதற்காக குழந்தை சிகிச்சை மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.

3-ம் அலை கணிப்புபடி முதல் மற்றும் 2-ம் அலைகளால் பாதிக்கப்பட்ட இடங்களை விட இதுவரை பாதிக்கப்படாத இடங்களில் வலுவாக தாக்கும். இதற்கு காரணம் முதல் மற்றும் 2-ம் அலைகள் வந்த இடங்களில் நோய் எதிர்ப்பு சக்தி அநேகருக்கு கிடைத்திருப்பதுதான் காரணம்.

3-ம் அலையின் தாக்கத்தை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் தாக்கத்தை முதல் இரண்டு அலைகளின் மூலம் கிடைத்த அனுபவத்தால் குறைத்து விடலாம் என்று கருதப்படுகின்றது.

இதற்கு நாம் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும், திருமண விழாக்களிலும், கூட்டமான இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

முக கவசம் அணிவது, இருமல், காய்ச்சல் பாதிக்கப்பட்டோர் அருகில் செல்வதை தவிர்ப்பது, வீடு மற்றும் வெளி இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.