April 25, 2024

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வழிகாட்டுகிறார் பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார்..!

வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதற்காக அல்லாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள்ஒதுக்கீட்டு வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிடுவாரா?

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மேலான பார்வைக்கு..!

தமிழ்நாட்டில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை உடனடியாக நடத்தி அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மத்திய அரசை நம்பிக் கொண்டு இருக்காமல் அல்லது மத்திய அரசை காரணம் காட்டி கணக்கெடுப்பை தள்ளி வைக்காமல் அனைத்து கட்சி முடிவின் படி அமைச்சரவையில் முடிவை எடுத்து உடனடி தேவை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஏற்பாடு செய்ததை போல் தமிழ்நாடு அரசு தானே முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்று வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு முதல்வரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எந்த ஒரு சாதிக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான அடிப்படை புள்ளி விவரங்களில் முக்கியமான ஒன்று தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. அதை தான் நிரந்தர தீர்வாக நீதிமன்றங்களும் கருதுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதால் மாநில அரசுகள் அதையே காரணமாக கூறி மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போட்டு வருகிறது. அதை முறியடிக்கும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் அவர்கள் பல ஆண்டுகளாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மத்திய அரசின் மெத்தன போக்கால் பீகார் முதலமைச்சர் மாநில அரசு சார்பில் தாங்களே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தப் போகிறோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த ஒருமனதாக முடிவெடுத்துள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக கட்சி, கம்யூனிஸ்டுகள் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) மற்றும் பீகார் மாநில கட்சிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் அடுத்தப்படியாக அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டி ஒப்புதலை பெற்று கணக்கெடுப்பு பணிகளை துவக்கி உள்ளார். இந்த வழிகாட்டுதலை பின்பற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இடஒதுக்கீட்டு குரல் கொடுப்போம் அனைத்து சமுதாயத்தினரும் நீதி வழங்கும் வகையில் வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதற்காக உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தையும் அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீட்டு சட்டத்தின்படி தேவையான தரவுகள் இல்லையென்று அதிமுக இயற்றிய சட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில் தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்து உள்ள நிலையில் இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும். இனியும் இதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் நீதி மன்றத்தையும், சட்டத்தையும், சட்டம் ஆலோசனைகளையும் காரணம் காட்டி காலதாமதம் செய்து வன்னியர்களக்கு இடஒதுக்கீடு வழங்காமல் இருந்தால் இதன் எதிரொலியாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலையை ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் ஒன்று திரண்டு ஒரு நல்ல முடிவை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மாவட்ட தோறும் முழு ஆதரவு அளித்து மொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் திமுகவுக்கு ஆதரவாக வெற்றிப் பெற செய்த வன்னியர்கள் உள் இடஒதுக்கீடு வழங்கிய அதிமுகவிற்கு சாதகமான முடிவை எடுக்க தயங்கமாட்டார்கள் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தகவலைப் பார்த்து தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி தலைமைக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் வன்னியர்கள்.

இந்த விஷயத்தில் புதிதாக தலைமை பொறுப்பேற்றிருக்கும் பாமக கட்சியின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடஒதுக்கீட்டு விஷயத்தில் மற்ற அரசியல் கட்சியைப் போல் செயல்பட போகிறாரா? அல்லது 10.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு பெறுவதற்கான முயற்சியை எடுப்பாரா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இப்படிக்கு

அகில இந்திய வன்னியர்கள் கூட்டமைப்பு
மற்றும் அகில இந்திய சத்திரிய சங்கங்கள்