September 18, 2024

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்- ஒருங்கிணைப்பு குழுவுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ரூ.200 அபராதம் விதிப்பதை அரசு கடுமையாக செயல்படுத்தி வருகிறது.

கொரோனாவில் இருந்து பாதுகாக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதையொட்டி கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி முக்கிய துறைகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியை கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் அமைத்துள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள், சிறு குறு தொழிலாளர்கள், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நஜிமுதீன், அபூர்வா ஆகியோரும், ஐ.பி.எஸ். அதிகாரிகளில் விசுவநாதன், மைதிலி ராஜேந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை கண்காணித்து தேவையான உதவிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜயராஜ் குமார், மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன், தீபக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கூட்டத்துக்கு தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ஜெகநாதன், அரசு ஆலோசகர் சண்முகம், கூடுதல் தலைமை செய லாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு குழு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த அளவுக்கு உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

வெளி மாநில தொழிலாளர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வெளி மாநிலத்துக்கு செல்ல ஏராளமான தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் அதை சமாளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்தால்தான் மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது கொரோனாவுக்கு தினசரி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர். ஆஸ்பத்திரிகளில் 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் உள்ளதால் கொரோனா பரவுவதை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தும் இதில் விவாதித்தனர்.

கொரோனா தொடர்ந்து பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக என்னென்ன அம்சங்களை செயல்படுத்துவது என்பது குறித்தும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.