November 3, 2024

கொரோனாவை புள்ளியாக்கிகோலம் போடும் கட்சிகள்

[responsivevoice_button voice=”Tamil Male”]இந்தியாவுக்கு, கொரோனா கோல விளையாட்டுக்கான பொல்லாத நேரம் போலிருக்கிறது. கொரோனாவை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் , விளையாட ஆரம்பித்துள்ளன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவரவர் சொந்த ஊருக்கு அனுப்புவதில் இந்த விளையாட்டு தொடங்கி இப்போது, பல்வேறு தளங்களில் நடந்து வருகிறது. கொரோனாவை தடுக்கும் விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ்-ஆளுநர்-பா.ஜ.க. என மும்முனை போட்டி நடந்து இன்னும் ஓயவில்லை. உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் இரு மாநில முதல் அமைச்சர்கள் தலை உருளும் அளவுக்கு பிரச்சினை. என்ன விவகாரம்? உத்தரபிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. 25 தொழிலாளர்கள் மடிந்து போனார்கள். இந்த உயிர் இழப்பு குறித்து உத்தரபிரதேச பா.ஜ.க. அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளதுஎன்ன சொன்னார்?.

இவர்களுக்கு கொஞ்சமும் பொறுமை கிடையாது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல இடங்களில் சாப்பாடு வசதி, தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.அங்கே தங்கி இருக்காமல் அவர்கள் திருடர்கள் போல் ஓடுகிறார்கள்’’ என்று விமர்சித்தார், அமைச்சர் சவுதாரி.

இதற்கு கண்டனம் எழுந்த நிலையில், மன்னிப்பு கேட்டுக்கொண்டார், அந்த அமைச்சர். ஆனாலும் பிரச்சினையை அரசியலாக்கி விட்டன, எதிர்க்கட்சிகள். அமைச்சரின் கருத்தை உத்தரபிரதேச மாநில அரசின் கருத்தாகவே .நினைக்கிறோம். எனவே இந்த விவகாரத்தில் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வேறொரு பிரச்சினை தலை தூக்கும் போது, அமைச்சர் சர்ச்சை ஓய்ந்து போகும்.

ஆந்திர மாநில விவகாரம் இப்போது. விசாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான நர்சிப்பட்டனம் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் டாக்டர் கே.சுதாகர், கொரோனா விவகாரத்தில் மாநில அரசை குறை கூறி இருந்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு உள்ளது’’ என்று செய்தியாளர்களை அழைத்து பேட்டி அளித்த டாக்டர் சுதாகர்’’.ஒரே முகக்-கவசத்தை 15 நாள் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம்’’ என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து டாக்டர் சுதாகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாகப்பட்டனத்தில் நடுரோட்டில் குடிபோதையில் அவர் தகராறு செய்தததாக கூறப்படுகிறது. டாக்டர் சுதாகரை போலீசார் அடித்து உதைத்து அவரது கைகளை பின் புறமாக சங்கிலியால் கட்டி, ஆட்டோவில் தூக்கி போட்டுள்ளனர்.

அங்குள்ள மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் சுதாகர், இப்போது மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது ஆந்திராவில் தலைப்பு செய்தி. அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்.

சும்மா விடுவாரா?. டாக்டர் சுதாகரை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும்’’ என்று சந்திரபாபு நாயுடு போர்க்கொடி தூக்கி உள்ளார். அந்த டாக்டர், தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இதனை சாதி ரீதியிலான பிரச்சினையாக்கவும் முயற்சி நடக்கிறது. இந்த விவகாரத்தில் அவருக்கு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் துணை நிற்கின்றன. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பதில் என்ன? சுதாகர், தெலுங்கு தேசம் கட்சியின் விசுவாசி. சந்திரபாபு நாயுடு தூண்டுதலின் பேரில் அந்த டாக்டர் செயல் படுகிறார்’’ என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.. கொரோனாவால் தூக்கம் தொலைத்துள்ள ஆந்திர மக்கள் இந்த காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். –பாபா