July 29, 2025

மன அமைதி

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் எல்லா நேரமும் நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா என்றால் அதற்கு விடை அவரவர்கள் தான் சொல்ல வேண்டும்.

அவரவர் மகிழ்ச்சி அவரவர் எண்ணத்தில் தான் உள்ளது. எதுவுமே நிலையானது கிடையாது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட நாம் முதலில், மற்றவர்களின் மன நிலையை அறிந்து, விட்டு கொடுக்கும் தன்மையுடன், அவர்களின் கருத்தினை உள்வாங்கி கொண்டு, அவர்களுக்கு உடனே நமது பதிலினை திருப்பிக் கொடுக்க விரும்பாமல், பிறகு அவர்களுக்கு நம்முடைய கருத்தினை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நாம் நம்முடைய அனுபத்தின் மூலமாக கூறுகின்ற பதிலினை அவர்கள் புரிந்துகொள்ளாமல், அவர்கள் விவாதம் செய்தால், அதற்கு தொடர்ந்து நாமும் விவாதம் செய்ய முற்பட்டால், இது போன்ற நிலை குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும். இதுவே பழக்கமாகி, அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை மற்றும் பிளவு ஏற்பட காரணமாக மாறிவிடுகின்றது. ஆகவே, இந்த முறை தோற்றுவிட்டோம் என்று நினைத்துக் கூட எதிர்த்து பேசாமல் விட்டுக் விடலாம். இது போன்ற செயல், விட்டுக் கொடுப்பவர்களுக்கு, மனவருத்தத்தை தரும். ஆனால், பெரிய அளவு பிரச்சனை வருவதை தவிர்க்கும்.

அவரவர் செயல்களின் மூலமாக மகிழ்ச்சியினை அனுபவிக்கலாம். பலரை பார்த்தவுடன் புன்முறுவல் செய்வது, அவரிடம் நலம் விசாரிப்பது, சிலரை பார்த்தாலும், பார்க்காமல் இருந்து விடுவது, அவரிடம் நமது பேச்சியினை தவிர்ப்பது நமக்கு மகிழ்ச்சியினை தரும். நாம் சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நினைப்பினை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் கருத்துக்களையும் கொஞ்சம் கவனிக்கப் பழகி கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சியாக வாழ, நம்மில் மாற்றம் வேண்டுமெனில் மாற கற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது அவர்கள் மாறவில்லையென்றால் அந்த சூழலை ஏற்றுக் கொள்ள பழகி கொள்ளுங்கள். ஏற்க முடியாததை முற்றிலுமாக புறக்கணியுங்கள்.

எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. கிடைப்பதை கொண்டு சிறப்பாக வாழ பழகி கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் பெரும்பாலானோர், அவர்களாகவே தங்களின் மகிழ்ச்சியினை தொலைத்து விட்டு, தன்னையும் வருத்தப்படுத்தி, தன்னை சுற்றியுள்ளவர்கள் துன்பத்திற்க்கு ஆளாக்குவதை பார்த்து வருகின்றோம். இதற்க்கு காரணம், தான் சொல்வதை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்ற பிடிவாதம். இவர்கள், தங்களுக்குள்ளே ஒரு கற்பனை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு, அதன்படி தான் மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது, அவர்களின் மகிழ்ச்சியினை பறித்து விடுகின்றது.

எல்லா துறைகளிலும் எல்லாராலும் பெரிய அளவில் வரமுடியாது. அவரவர் துறைகளில், விடா தொடர் முயற்சியுடன், வெற்றி பெற தேவையான வழிமுறைகளை கற்றுக் கொண்டு முயற்சித்தால். நிச்சயம் வெற்றி கிடைக்கும் அதன் மூலம் எல்லோருக்கும் மகிழ்ச்சி கிட்டும்.

சுவாமி விவேகானந்தார் அவர்கள், மகிழ்ச்சி என்பது வெளிப்புற சூழலை பொருட்படுத்தாமல், மனதிற்குள் அமைதியைக் கண்டறிவதிலும், தன்னலமற்ற செயல்கள் மற்றும் வலிமையுடன் செயல்படுவதிலும் உள்ளது என்று கூறுகிறார். நம்மில் அமைதி வேண்டுமென்றால், எதையும் ஏற்றுக் கொள்ளும் மனம், பொறுமை, தூய்மையுடனான செயல்கள் ஆகியவற்றை நம்மில் பழகி கொள்ள வேண்டும். தங்களின் கடமையை செய்வதின் மூலமும் மகிழ்ச்சியினை பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

நம்மால் மற்றவர்களுக்கு பயன் இருக்குமாறு நடந்து கொண்டாலோ மற்றும் நம்மால் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருந்தாலும் நாம் மகிழ்ச்சியினை பெறலாம். எல்லா செயல்களுக்கும் எதிர்வினை உண்டு என்பதை அறிவோம். நம் மனதை நாம்… அமைதியுடன் வைத்துக் கொண்டால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

– பேரா.முனைவர் மு.இராமகிருஷ்ணன் நாயகர்
தலைவர், எஸ்.எஸ்.எஸ்.சமூக நற்பணி மன்றம்