July 29, 2025

ஆட்சியில் பங்கு வேண்டும்… குரல் எழுப்பும் தோழமை கட்சிகள் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை… திமுக – அதிமுக உறுதி…!

1952- ஆம் ஆண்டு முதல் பொது தேர்தலில் வெற்றிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த ஆட்சியில் மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்த பொழுது கூட்டணி கட்சிகளுக்கு தனது அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கினார். இப்படி பதவி பெற்றவர் காமன்வித் கட்சியின் தலைவர் எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர், உழைப்பாளர் கட்சியின் தலைவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அநேகமாக இந்தியாவிலேயே முதன் முதலில் கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டது தமிழகம் என்று கூறலாம். இதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் அமைந்துள்ள ஆட்சிகள் அனைத்துமே தனித்த ஆட்சிகள் என்று கூறலாம்.

குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஆட்சிகள் இவை. அதன் பிறகு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மத்திய அமைச்சரவையில் உருவாக்கியது. அதே போல் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக ஆட்சியிலும், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மன்மோகன் தலைமையில் ஆட்சியில் பல்வேறு மாநில கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து தற்பொழுது பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், இன்னும் சில மாநிலங்களில் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் திமுக, அதிமுக கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்ற பிறகு ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற குரல்களை உயர்த்தி வருகிறது. குறிப்பாக திமுக தலைமையில் உள்ள சில கட்சிகளும், அதிமுக தலைமையில் உள்ள சில கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைத்தால் என்ன என்ற கேள்வியை பொதுவெளியில் பேச தொடங்கி உள்ளது. இருந்த பொழுதும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சி ஆட்சி விரும்பவில்லை. திமுகவை பொறுத்தவரை கடந்த 1996 ஆம் ஆண்டு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பொதுமான அளவு எண்ணிக்கை (17) கிடைக்காத போதும் தனித்து 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காலகட்டத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள், பாமக உள்ளிட்ட சில கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த போதும், தங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கவில்லை. இந்த சூழலில் எதிர்கட்சி தலைவராக இருந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்கள் திமுக அரசை மைனாரிட்டி அரசு என்றே அழைத்து வந்தார். இப்பொழுது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆட்சியில் பங்கு வேண்டுமென்ற தங்கள் கட்சி தொண்டர்களின் ஆசைகளை வெளிப்படுத்தி வருவதுடன், கூட்டணி தலைமை தாங்கும் திமுகவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கடி தருவது போல், சூழலை உருவாக்கி வருகிறார்கள். என்ன தான் கொள்கை கூட்டணி என்று கூறப்பட்டாலும் உள்ளுக்குள் ஆசை என்பது தற்பொழுது எல்லா கட்சிகளுக்கும் வந்து விட்டது என்றே கூறலாம்.

அதிமுக தலைமை பொறுத்த வரை தாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதை எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து பேசி வருகிறார். அதே நேரம் பாஜக கட்சி மற்றும் அதன் தலைமையில் அணிவகுக்கும் கட்சிகளும், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். திமுகவை பொறுத்தவரை ஆட்சிப் பங்கு என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை எங்கும் எந்த இடத்திலும் வெளிப்படுத்துவதில்லை. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும் போது கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள் என்கிறார்.

புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் கட்சி தொடக்க விழா கூட்டத்திலேயே அறிவிப்பை வெளியிட்டு தங்கள் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றிப் பெற்றாலும், தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார். இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு கூட்டணி ஆட்சி வெற்றிப்பெற்றால் ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை தீவிரமாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை தெரிந்தப் பிறகு தான் தனித்து ஆட்சியா, கூட்டணி ஆட்சியா என்பதை முடிவு செய்ய முடியும். இருந்த பொழுதும் கூட்டணி ஆட்சி என்ற குரல் ஒலி தமிழக வாக்காளர்கள் மத்தியில் மெல்ல மெல்ல ஊடுருவி பேசு பொருளாக மாறி வருகிறது.

மீண்டும் தமிழ்நாட்டில் 1952&ல் அமைந்ததைப் போல் கூட்டணி ஆட்சி அமையுமா? 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும். காத்திருப்போம்.
– டெல்லிகுருஜி