சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை விமர்சிப்பதில் எதிர்கட்சியான அ.தி.மு.க.வை மிஞ்சி விட்டார் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. இதனால் அவர் எந்த கட்சியும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதை அண்ணாமலை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- தி.மு.க.வில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகிறார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால் நான் தமிழக அரசை தனி மனிதனாக இருந்து எதிர்க்கிறேன். எங்களை பொறுத்தவரை தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகிறது. இந்த காலங்களில் ஏராளமான ஊழல் செய்துள்ளார்கள். காங்கிரசுக்கு ஒரு 2ஜியை போல் தி.மு.க.வுக்கு ஒரு எனர்ஜி நிறுவனமான பி.ஜி.ஆர். என்று பட்டியல் போட்டு வைத்துள்ளோம். சரியான காலம் வரும்போது அந்த ஊழல் பட்டியலை வெளியிடுவோம். அது வெளியானதும் இந்த ஊழல் புகாரால் தி.மு.க.வின் அஸ்திவாரமே ஆட்டம் காணும். ஒரு தனிமனிதனாக தமிழகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் இல்லாத தகுதி எனக்கு உள்ளது. மிகப்பெரிய குடும்ப பின்புலம் இல்லாமல் முதல் தலைமுறை அரசியல்வாதியாக நான் இவ்வளவு தூரம் பயணித்துள்ளேன். இதை கட்சி சார்ந்த சிலர் ஊடகங்களின் போர்வையில் ஒளிந்து கொண்டு என்னை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். அறம் சாராமல் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்களை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
தவெகவுக்கு தாவும் ’தங்க’’இனிஷியல்’ மாஜி?
கேட்டை திறந்த விஜய்..
பிரதமர் வருகை…
வரவேற்பும்.. புகார்களும்…!
தமிழக அரசியல் வரலாறும்…
விஜய்யின் வெற்றி கணக்கும்..!