April 20, 2025

பணி நியமன முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பு

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் தீபாவளி இனிப்பு மற்றும் நெய் விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மதுரை ஆவின் நிறுவனம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பால் பொருட்கள் விற்பனையில் முக்கிய நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மதுரை ஆவினில் பால் வினியோகம் மற்றும் தயிர், வெண்ணெய், நெய் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் உள்ளிட்ட பொதுமக்களை கவரும் பல்வேறு பால் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மதுரை ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் பணியாளர் தேர்விலும் பல்வேறு முறைகேடுகளின் மூலம் பணி நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆவின் விஜிலன்ஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை கே. கே. நகர் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி தினங்களில் இனிப்புகள் சில நபர்களுக்கு மொத்தமாக டன் கணக்கில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்ட நெய் விநியோகத்திலும், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நெய் விநியோகத்திலும் முறையான ரசீதுகள் போடப்படாமல் மோசடி நடந்துள்ளது ஆவணங்களில் தெரியவந்துள்ளது

மதுரை ஆவின் நிறுவனத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆவின் அலுவலகங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளர் முதல் சூப்பர்வைசர், மேலாளர்கள் வரை பல்வேறு பணிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பணி நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் எழுந்த புகார் குறித்தும் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பணி நியமனங்கள் பெற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது‌. இந்த பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

இதனால் ஆவின் நிறுவனத்தில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட முக்கிய கோப்புகளை கைப்பற்றிய விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறைகேட்டில் ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆவின் முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பும் ஆவின் நிறுவனத்தில் விஜிலன்ஸ் சோதனை நடைபெற்றது. அப்போதும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆவணங்களை முறைப்படி ஆய்வு செய்து எந்தெந்த வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பதையும் விஜிலென்ஸ் அதிகாரிகள் பட்டியலிட தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை இன்னும் ஒரு சில நாட்கள் நடைபெறும் என்றும், முறைகேட்டில் போதிய முகாந்திரம் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாய வாய்ப்பு இருப்பதாக மதுரை ஆவின் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளிலும் ராஜேந்திர பாலாஜியின் சிக்குவது உறுதியாகி உள்ளதாக மதுரை ஆவின் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. எனவே ஆவின் முறைகேடு தொடர்பாகவும் ராஜேந்திர பாலாஜி மற்றும் சில ஆவின் அதிகாரிகள் மீது விரைவில் வழக்கு பதிவு செய்ய ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.