திமுக முப்பெரும் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் விருதை பாப்பம்மாள் பெற்றுள்ளார். அவர் சார்பில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த விருதைப் பெற்றிருக்கிறார். பெரியாருக்கு, பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்களே பெண்கள்தான். அந்த வகையில், பெரியார் விருதை ஒரு பெண் பெறுவது மிக மிகப் பொருத்தமானது. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, திமுக தொண்டராகச் சேர்ந்து, திமுக நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்து, 108 வயதிலும் திமுகவின் அடையாளமாக மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளமாக பாப்பம்மாள் விளங்குகிறார்.
பேரறிஞர் அண்ணா பெயரிலான விருதை-அறந்தாங்கி ’மிசா’ராமநாதன் பெற்றுள்ளார். மாணவர்களை இணைத்து 1964ல் திமுகவுக்காக தன்னுடைய தொண்டைத் தொடங்கியவர் ராமநாதன் . மொழிப்போரில் கலந்துகொண்டார்! 1976ம் ஆண்டு மிசா கைதியாக ஓராண்டுகாலம் சிறையில் இருந்ததோடு, திமுகவின் எல்லாப் போராட்டங்களிலும் பங்கெடுத்த, தியாகத்தின் அடையாளம்தான், நம்முடைய ராமநாதன்!
தலைவர் கலைஞர் பெயரிலான விருதைத் தலைவர் கலைஞரால்’ ஆழ்வார்’என்றும்- என்னால் ’திராவிட ஆழ்வார்’ என்றும் அழைக்கப்படும் – ஜெகத்ரட்சகன் பெற்றுள்ளார். இதயத்தின் ஒரு பக்கத்தைக் கலைஞருக்கும் இன்னொரு பக்கத்தை ஆழ்வார்களுக்கும் அர்ப்பணித்தவர் ஜெகத்ரட்சகன். பள்ளிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்தவர். கல்லூரிக் காலத்தில் பெரியாரைச் சந்தித்த காரணத்தால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அதனால்தான் இத்தனை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஜெகத்ரட்சகன் தொடங்கினாரா என்று நமக்கு சந்தேகமாக இருக்கிறது! கல்வி நிலையங்கள், இலக்கியப் பணிகள் என இருந்தாலும்-அரசியலையே முழுமூச்சாகக் கொண்டு ‘கலைஞரே சரணம்’ எனப் பணியாற்றும் கலைஞர் பக்தர் இவர்! எத்தனையோ சோதனைகள், மிரட்டல்கள், நெருக்கடிகள் அவருக்கு வந்தன. இன்னமும் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அச்சமில்லாமல், யாரோடும் சமரசம் ஆகாமல், கழகமே துணை எனக் கம்பீரமாகச் செயல்பட்டு வரும் ஜெகத்ரட்சகன். அதனால் அவருக்குக் கலைஞர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
பாவேந்தர் பாரதிதாசன் விருதைக் கவிஞர் தமிழ்தாசன் பெறுகிறார். மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்ததற்காகப் பள்ளி மாணவராகக் கைது செய்யப்பட்டவர். பள்ளியில் படிக்கும்போதே மரபுக் கவிதைகள் எழுதும் அளவுக்குத் திறன் அவருக்கு இருந்தது. உணர்ச்சிமிக்க கவிதைகளைத் தீட்டி வருபவர். இது எல்லாவற்றையும் விட, தொலைக்காட்சி விவாதங்களில் சிங்கமெனச் சீறி, திமுகவின் கொள்கைகளை, நிலைப்பாடுகளை நிலைநிறுத்துபவர்! புரட்சி வாதங்களை வைக்கும் அவருக்குப் புரட்சிக்கவிஞர் விருதை வழங்கியிருக்கிறோம்!
பேராசிரியர் விருதை என் இனிய தோழன் வி.பி.ராஜன் பெறுகிறார். 1969ம் ஆண்டே தனது கிராமத்தில் அண்ணா அறிவாலயம் என்ற படிப்பகம் தொடங்கியவர் வி.பி.ராஜன். 1972ம் ஆண்டுமுதல் திமுகவில் தீவிரமாகப் பணியாற்றிய அவர் 1980-களில், நான் இளைஞரணியை வழிநடத்தத் தொடங்கிய காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். மேடைகளில் ஏறினால், எதிரிகளுக்கு பி.பி-யை எகிற வைப்பார் வி.பி! அதனால்தான் தலைவர் கலைஞர் அவரைப் ‘புலிக்குட்டி’ என அழைத்தார். அவருக்கு இனமானப் பேராசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
என் பெயரிலான விருதை ஒன்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பெறுகிறார். 1962ம் ஆண்டு தலைவர் கலைஞர் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது பள்ளிச் சிறுவனாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டுத் தேர்தல் பரப்புரை செய்தவர் பழனிமாணிக்கம். மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டவர். மாணவர் திமுகவில் இணைந்து வேகமாகப் பணியாற்றியவர். ஆறு முறை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்பது ஆண்டுகள் ஒன்றிய அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகள் மூலமாகக் திமுவுக்கு பெருமை சேர்த்த பழனிமாணிக்கம், எனது பெயரிலான விருதைப் பெறுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
More Stories
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
திருமாவளவன் அரசியல் நிலைப்பாடு என்ன? 2026 தேர்தல் – திமுக அணியில் தொடருமா?
அவசரப்படுகிறார் நடிகர் விஜய்
வார்த்தையை விடுகிறார் ஜெயகுமார்…