சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளி நடப்பு செய்தார்கள். பின்னர் நிதி அமைச்சர் அவர் ஆற்றிய உரையில் உள்ளது.
*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம், கடலூர், நெல்லையில் ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கப்படும்.தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
*பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும் . துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியை உருவாக்கிட ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*அண்ணா பல்கலை. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே சிறந்த பல்கலை.யாக மாற்ற ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*நாட்டில் முதல் 10 இடங்களில் அண்ணா பல்கலையை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய சட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
*பொறியியல், வேளாண்மை படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர் கல்வி செலவை ஏற்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள் அதிகம் விரும்பி சேரும் பாடப் பிரிவுகளில் 15,000
இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.
*குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும். முத்துப்பேட்டை பெரம்பலுர். மானாமதுரை, திருவிடைமருதூர் ஒட்டப்பிடாரத்திலும் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
*திசையன்விளை, ஏம்பல், செம்பனார் கோவில், தா.பழூர், மணப்பாறை. காங்கேயம் திருச்செங்கோட்டில் ரூ. 152 கோடியில் 10 புதிய அரசு ஐடிஐக்கள்.
*தொழிவாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ. 1975 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ 20,000 மானியம் வழங்கப்படும்.
*சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் உருவாக்கப்படும். அறிவியல் மாநாட்டு கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் சென்னை அறிவியல் மையம் 90 கோடியில் அமைக்கப்படும்.
- 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். உயர் கல்வியில் சேரும் மாணவிகள் சதவீதம் 19ஆக உயர்ந்துள்ளது.
*சென்னை, கோவை, மதுரையில் ரூ.275 கோடி மதிப்பீட்டில் 3 மாணவியர்கள் விடுதிகள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 570 கி.மீ சாலைகள் ரூ.486 கோடியில் தரம் உயர்த்தப்படும். கோவை மாநகராட்சியில் ரூ.200 கோடியிலும் மதுரை மாநகராட்சியிலும் ரூ 130 கோடியிலும் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
*சென்னை கொருக்குப்பேட்டையில் ரூ.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர்கள் வருகை, ஊட்டச்சத்து, கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.
*சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 172 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 841 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்படுவர். ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
*2,676 அரசுப் பள்ளிகளில் ரூ.65 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் அமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாட்டு பல்கலை.களில் உள்ள உயர்வாய்ப்பு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு திட்டம் வகுக்கப்படும்.
*எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.150 கோடியில் 10 புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி பாடத்தில் செஸ் போட்டிகளை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படும்.கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை அட்டை வழங்கப்படும்.
*1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கப்படும்.ற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும்.
*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் புற்று நோய். இருதய நோய் சோதனை மேற்கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும். நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
*தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் ரூ. 50 கோடியில் செயல்படுத்தப்படும். கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும்.மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா ரூ. 250 கோடியில் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
*திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும்.விருதுநகரில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
*ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக ரூ. 150 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
*10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்.
*கழுகுகள்,பருந்துகள் மற்றும் வல்லூறுகள் உள்ளிட்ட வேட்டையாடும் பறவைகள் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதால், பல்லுயிர்ப் பெருக்கத்தினை உறுதி செய்திடும் குறியீடாக வேட்டைப் பறவைகளின் இருப்பினை சூழலியலாளர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருநெல்வேலி. மதுரை அரிட்டாப்பட்டி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காணப்படும் இவ்வகை வேட்டைப் பறவைகள். அண்மைக் காலமாக வாழிடச் சிதைவு, நச்சுப் பொருட்களின் பரவல் ஆகியவற்றின் காரணமாக பெரும் வாழ்வியல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
*எனவே, வேட்டைப் பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாத்திட உரிய திட்டங்களை தீட்டவும். உள்ளூர் மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ஒன்று அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியினைக் கொண்டு உருவாக்கப்படும்.
*திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ. 400 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்படும்.
*சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ரூ. 85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1920 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சென்னையில் பெருநகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2423 கோடி மதிப்பீட்டில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் . நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ 26.678 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்.
*சென்னை, கோவையில் ரூ.100 கோடி செலவில் அடிப்படை அறிவியல் & கணித அராய்ச்சிப் படிப்புகள் மையம்.
*சென்னை பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
*கோயம்பேடு – பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. 700 டீசல் பேருந்துகள், ரூ.70 கோடி செலவில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
*விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (ஸிஸிஜிஷி) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர்,கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம்.. மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.
*மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பதவி பெறும் வகையில் சட்டத்திருத்தம் நடப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்.
More Stories
தமிழ் பேசு தம்பி…!
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
இளைஞர்களை அணி திரட்டுகிறார்
பண்ருட்டி வேல்முருகன்