July 1, 2025

தமிழ்நாடு அரசு – நான் முதல்வன் திட்டத்தில்
ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு UPSC தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசின் மூலம் வழங்கப்படும் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு ஜூன் 21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்தியாவின் குடிமை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். 2025-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 979 காலிப்பணியிடங்களுக்கு மே 25-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் ஜூன் 11-ம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வை எழுதிய நிலையில், 723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏராளமான முன்னெடுப்புகள் கொண்டுவரப்பட்ட வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் போட்டித்தேர்வுகள் பிரிவுன் மூலம் யுபிஎஸ்சி தேர்விற்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பிரிவு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2023-24 பட்ஜெட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டு, இத்திட்டத்தின் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு 1000 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு முதல்நிலை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்டு மாதம் ரூ.7,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், அதில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், 2025-ம் ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். முதன்மைத் தேர்விற்கு விண்ணப்பித்த படிவம், வங்கி விவரங்கள் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு ஜூன் 21 முதல் ஜூலை 2 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தொகை செலுத்தப்படும்.

விண்ணப்பதார்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், இருப்பிட சான்றிதழ் சரிபார்க்கப்படும். முதல் கட்ட விவரங்கள் நான் முதல்வன் திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். இது குறித்த சந்தேகங்களுக்கு 9043710214 / 9043710211 என்ற மொபைல் எண் மற்றும் nmcegrievances@naanmudhalvan.in என்ற இமெயில் முகவரியில் தொடர்புகொள்ளலாம். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024-25 பட்ஜெட்டில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு ரூ.50,000 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேர்முகத் தேர்விற்கான செல்ல பயணக் கட்டணமும் வழங்கப்பட்டு வருகிறது.