April 20, 2025

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக வருவதுண்டு.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் கவலையில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து அலங்காநல்லூரில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை நடைபெற்றது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.