July 1, 2025

உயர் கல்வித் துறையில் உருவாகும் பிரச்சினை!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பேராசிரியர் பணியிடங்களை நிரப்பமால் கல்லூரிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிப்பது கல்வித் தரத்தை பாதிக்கும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஆகிய ஊர்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20 அன்று தொடங்கப்பட்டுள்ளன.

திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு கட்டங்களாக 31 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று புதிதாக நான்கு அரசு கலை கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது.

கல்லூரிகள் திறப்பது, கல்வி சார் கட்டிடங்கள் திறப்பது மிகவும் முக்கியம், அதேபோல் ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்றும் ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சுரேஷ் இது தொடர்பாக பேசும் போது, “இந்த ஆண்டு மட்டும் 15 புதிய அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அமைந்ததிலிருந்து 35 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியுள்ள 15 கல்லூரிகளில் பணியாற்ற புதிய பேராசிரியர்களை நியமிக்காமல் அருகில் உள்ள கல்லூரிகளின் பேராசிரியர்களை அனுப்புகிறார்கள். ஏற்கனவே ஆள் பற்றாக்குறையுடன் தான் கல்லூரிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் போது, தற்போது இரண்டு இடங்களிலும் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் கல்வித் தரம் பாதிக்கப்படும்” என்று கூறினார்.

தமிழக அரசு கல்லூரிகளில் 2015ஆம் ஆண்டில் 1000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. ஆனால் கல்லூரிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளதால் 2000க்கு அதிகமான ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.

அரசு கல்லூரிகளின் ஆசிரியர் காலி பணியிடப் பிரச்சினையை சரி செய்ய தற்காலிக மற்றும் கௌரவ பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுவருவதாக உயர் கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். தகுதி வாய்ந்த பேராசியர்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே கல்வியின் தரம் உயரும். உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் விகிதத்தில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக விளங்குகிறது.