April 20, 2025

இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளில் இருந்து விலகக்கோரி போராட்டம் நடந்தது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். ஆனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்தார். இதையடுத்து அதிபர் மாளிகைக்கு எதிரே காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அங்கேயே கூடாரங்களை அமைத்து தங்கினர். இதற்கிடையே இலங்கையில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற மறுநாளே காலிமுகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்களை போலீசார் அகற்றியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கேயே தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதாக இன்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கை அரசுக்கு எதிராக புதிய வடிவில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.