April 4, 2025

ஆந்திர மேல்சபையை கலைத்த ஜெகன்மோகன் ரெட்டி

[responsivevoice_button voice=”Tamil Male”]ஆந்திராவில் மேல்சபையை கலைக்கும் தீர்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி முதல் அமைச்சராக உள்ளார்.அந்த மாநிலத்தில் விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி ஆகிய மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜெகன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேல்சபையில் மொத்தம் 58 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 28 பேர் எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள். ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 9 எம்.எல்.சி,க்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் அந்த மசோதாவை மேல்சபை நிராகரித்து விட்டது. இதனால் ஆந்திர மேல்சபையை ஒழிக்க ஜெகன் மோகன் முடிவு செய்தார்.

இது தொடர்பான தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது . கண்கள் சிவக்க பேசினார், ஜெகன்மோகன் ரெட்டி. நாட்டில் கல்வி அறிவு குறைந்து இருந்தபோது, அறிவாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க மேல்சபை தேவைப்பட்டது. இன்று அந்த நிலை இல்லை.

இந்த அவையில் டாக்டர்கள் உள்ளனர். பேராசிரியர்கள், பொறியாளர்கள், ஊடகவியலாளர்கள், சினிமா நட்சத்திரங்கள், விவசாயிகள் இருக்கிறார்கள்.பிறகு ஏன் மேல்சபை? மேல்சபைக்காக ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் அரசாங்க கருவூலம் செலவிடுகிறது. இனிமேல் ஒரு ரூபாய் கூட மேல்சபைக்கு செலவிட முடியாது.

தீர்மானத்தின் மீது பேசிய ஜெகன், ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மேல்சபை கொண்டு வரப்பட்டபோது அதனை கடுமையாக எதிர்த்தவர், சந்திரபாபு நாயுடு.’’ என்று குறிப்பிட்டார். மேலும் அப்போது சட்டசபையில் சந்திரபாபு நாயுடு பேசியதை, பேரவை எம்.எல்.ஏ.க்களுக்கு திரையிட்டு காட்டினார்.

பின்னர் இந்த தீர்மானம் ஓட்டெடுப்பு விடப்பட்டது. சட்டபேரவைக்கூட்டத்தை தெலுங்கு தேசம் புறக்கணித்து இருந்ததால், இந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டபின், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் தான் மேல்சபை அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்படும்.